தலிபான்களை பல உலக வல்லரசு நாடுகள் ஆதரித்துள்ள நிலையில், “தலிபான்களை ஆப்கான் அரசாக அங்கீகரிக்க முடியாது” என்று, கனடா அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளது, பல்வேறு உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதற்கு காரணம், தலிபான்களை தொடர்ந்து பல ஆண்டுகளாக தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் பார்க்கப்பட்டதும், அது குறித்து செய்திகள் தொடர்ந்து
வெளியானதுமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இப்படியாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் தலிபான்கள், பயங்கரவாத அமைப்பாக கருத்தப்பட்டதால், தலிபான்கள் அமைக்க உள்ள புதிய அரசை ஏற்றுக்கொள்வதில்
பல்வேறு உலக நாடுகளுக்கும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

அத்துடன், தலிபான்களுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்ததாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியானது.

மேலும், “இத்தனை நாட்களாக தலிபான்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வந்த சீனா, நேற்று முன்தினம் நேரடியாகவே தனது ஆதரவை அறிவிக்கும் விதமாக”
கூறியிருந்தது. 

“தலிபான்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் சீனா செயல்படும்” என்று, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெளிவுப்படுத்தியது.

அதே போல், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவும் தலிபான்களுக்கு ஆதாரவான நிலைப்பாட்டையே எடுத்து வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த சூழலில் தான், நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த தலிபான்கள், “எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை என்றும்,  சர்வதேச சமூகம் எங்களை
அங்கீகரிக்க வேண்டும்” என்றும், தலீபான்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் தான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் செய்தியாளர்களின் சந்தித்து பேசும்போது, அவரிடம் “ஆப்கானிஸ்தான் விவகாரம்” குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை” என்று, வெளிப்படையாகவே
அறிவித்தார். 

மேலும், “தலிபான்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலவந்தமாக தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்” என்றும்,
அவர் குற்றம்சாட்டினார்.

“கனடா நாட்டின் சட்டத்தின் படி, தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்படுவார்கள்” என்றும், அவர் வெளிப்படையாகவே அறிவித்தார்.
 
குறிப்பாக, “தலிபான்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுமார் 20 ஆயிரம் ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக” கனடா அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், டெல்லியில் நேற்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

அப்போது, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், ஆப்கான் நிகழ்வுகள், அது இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்தியர்களின் நிலை குறித்து விரிவாக
நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

குறிப்பாக, “உலக நாடுகள் எதிர்த்த தலிபான்கள் தலைமையில் ஒரு ஆட்சி அமைந்துள்ளதால், அந்த ஆட்சியை ஆதரிப்பதா? வேண்டாமா? என்கிற முக்கிய முடிவு
எடுக்கப்பட வேண்டும் என்றும், பல்வேறு தரப்பினரும் முன் வைத்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு வர்த்தக ரீதியிலும், கொள்கை ரீதியிலும் எதிரணியில் இருக்கும் பாகிஸ்தான், சீனா ஆதரிக்கும் தலிபான் அரசை இந்தியா எந்த வகையில்
ஏற்றுக்கொள்ளும் என்பது தொடர்பாக ஆழமான விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையி் தான், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. 

ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகவும் அப்போது முடிவெடுக்கப்பட இருக்கிறது.