முன்னூறு அகதிகளுடன் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

accident

கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த ஆண்டு முதல் அரசியல், பொருளாதார ரீதியில் குழப்பம் நிலவி வருகிறது. அந்நாட்டின் அதிபர் ஜோவினல் மொசி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ஹைதியில் கடந்த ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் குழப்பங்களை சந்தித்து வரும் ஹைதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். பொருளாதாரம், வாழ்வாதாரத்தை தேடி ஹைதியில் இருந்து கடல் வழியாக அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர். மேலும் இந்நிலையில், ஹைதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் நேற்று அமெரிக்கா நோக்கி படகு ஒன்று பயணம் செய்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு உள்பட்ட கடல்பரப்பில் அந்த படகு வந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கினர்.

மேலும் இந்த விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்ப்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல்ப்படையினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டனர். அதிலும், அகதிகள் சிலர் நீந்தியே கரையை அடைந்தனர். மேலும், படகு விபத்தில் வேறு யாரேனும் கடலில் மூழ்கியுள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.