கொரோனா பரவல் குறித்து முன்பே கணித்த பில்கேட்ஸ்... "ஒமிக்ரானால் மிக மோசமான அபாயம்"... மீண்டும் எச்சரிக்கை!
மற்ற வைரஸ்களை விட ஒமிக்ரான் வேகமாக பரவிவருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகில் கொரோனா பரவும் முன்பே அதை பற்றி எச்சரிக்கை விடுத்தவர்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் “நாம் எபோலா என்ற பெரிய வைரசில் இருந்து தப்பிவிட்டோம். ஆனால் எப்போதும் இப்படி தப்பிக்க முடியாது. வரும் நாட்களில் பெரிய வைரஸ் வரலாம்.
அது உலகம் முழுக்க பரவலாம். ஏன் உருமாற்றம் கூட அடையலாம். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் பெருந்தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டும்” என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார்.
அவர் சொன்னபடியே கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் குறித்து பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உலகளவில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிட்டது.
ஒமிக்ரான் அச்சுறுத்தலால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடையும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் விதித்துள்ளன. ஆனாலும் பிரி்ட்டன், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
“வரலாற்றில் எந்த ஒரு வைரஸையும் விட ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் உலகின் அனைத்து நாட்டிலும் பரவும் ஆபத்து உள்ளது. ஒமிக்ரான் உங்களை எப்படி தாக்குகிறது என்பது பெரிதாக தெரியாது.
இது டெல்டாவை விட பாதியாக 50 சதவீதம் தீவிரமானதாக இருந்தாலும், இதுவரை நாம் பார்த்த மிக மோசமான பாதிப்பாக இது இருக்கும். ஏனெனில் இது மிகவும் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது.
எனவே முகக்கவசம் அணிவது, பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்வது சிறப்பான பாதுகாப்பை அளிக்கும்.
வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தோன்றியபோது, நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் நம் அனைவரது வீட்டிற்கும் வரும்.
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இப்போது அது உள்ளது. எனது நெருக்கமான பல நண்பர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எனது கிறிஸ்மஸ் விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டேன். இங்கே ஒரு நல்ல செய்தி ஒன்று இருந்தால் அது இதுதான்.
ஒமிக்ரான் மிக விரைவாக கடந்து செல்லும் என்பதுதான் அது. ஒரு நாட்டில் ஒமிக்ரான் புகுந்தால் அங்கு கொரோனா அலை 3 மாதங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும்.
அந்த சில மாதங்கள் மோசமாக இருக்கலாம். ஆனால் நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022-ல் முடிவுக்கு வரும் என்று நான் இன்னும் நம்புகிறேன்.
எப்போதாவது தொற்றுநோய் முடிவுக்கு வரும். நாம் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம். அந்த நேரம் விரைவில் வரும்” இவ்வாறு பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.