சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பாட்டுப்பாடியது, தமிழகம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில், அந்த பாட்டுக்கு என்ன அர்த்தம் என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழக சட்டப் பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அதிமுக வெளி நடப்பு செய்தது.
அப்போது, சட்டப் பேரவையில் “அதிமுக சொன்ன சாதக மற்றும் பாதகமான கருத்துகளை கலந்தாலோசிக்காமல், தமிழக அரசு புதிதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்துவதால், நாங்கள் எங்கள் கருத்தைப் பதிவு செய்து விட்டு, வெளி நடப்பு செய்வதாக” எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பின்னர், தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளி நடப்பு செய்த பிறகு, அவை முன்னவர் துரைமுருகன் அதிமுக வெளிநடப்பு குறித்து, ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் “அந்த கருத்தை நீக்கி விடும் படி” சபாநாயகரிடம், திமுக அமைச்சர் துரைமுருகன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதைத்தொடர்ந்து, துரைமுருகன் கூறிய அந்த கருத்து, அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்த பிறகு, அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்குள் வந்தனர்.
அப்போது, பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், “அவை முன்னவர் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “அவராகவே இந்த கருத்தை நீக்கியதற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்றும், எங்களுடைய நிலை அவருக்கு நன்றாகத் தெரியும்” என்றும், கூறினார்.
மேலும், “நான் ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், இப்போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது” என்று கூறிவிட்டு, சட்டசபையில் அவர் திடீரென்று பாட ஆரம்பித்தார்.
அதன் படி பாடிய அவர், “நதியினில் பெரு வெள்ளம்; கரையினில் நெருப்பு; நடுவில் இறைவனின் சிரிப்பு, இது தான் என் நிலைமை” என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்” என்று சுட்டிக்காட்டி ஓ. பன்னீர்செல்வம் பாடினார்.
ஓ.பன்னீர்செல்வம் பாடிய இந்த பாடல் தான், இப்போது பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த பாடல் வரிகளைக் கேட்டாலே அதன் உள் அர்த்தம் என்னவென்று அனைவரும் எளிதில் புரிந்து விடும்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பாடிய இந்த பாட்டை வைத்து, இணைய வாசிகள் பலரும் “பாலபத்ர ஓணாண்டி ஸ்டைலில் கவி பாடினாரா ஓபிஎஸ்?” என்று, பலரும் கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.