ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றார் நடிகர் பார்த்திபன்
இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகர் பார்த்திபன் பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
இந்நிலையில் இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.
மேலும் அதுமட்டுமின்றி கடந்த மாதம் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த விருதை இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கும் வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பார்த்திபன் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கோல்டன் விசா இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த ஜுமா அல்மேரி குழுமம்-முகமது ஷானித் (CEO) & இதர நண்பர்கள் சொன்னார்கள். VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது என பதிவிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து 2000-ம் ஆண்டில் நடிகர் பார்த்திபன்,முரளி,வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் வெற்றிகொடிக்கட்டு. இந்த படத்தில் வடிவேலு மற்றும் பார்த்திபன் இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயை மையப்படுத்தி வரும் நகைச்சுவை காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்று வரை மறக்கமுடியாத காட்சியாக உள்ளது. பார்த்திபனுக்கு அதே துபாய் நாட்டில் கோல்டன் விசா கிடைத்திருப்பதையும் இப்படத்தின் வசனங்களையும் வைத்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.