நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியிருக்கும் நிலையில், நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவினை ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார்.
தமிழக ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, “அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய” தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த நாளே கூட்டியது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், “நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை தமிழக ஆளுநர் செய்யவில்லை” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதே போல், நீட் விலக்கு தொடர்பாக, “அடுத்து என்னமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது குறித்து முடிவு செய்ய, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியிருக்கும் நிலையில், நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
அதன்படி, தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் கடிதத்தின் நகலை சபாநாயகர் அப்பாவு, முழுமையாக வாசித்தார்.
மேலும், சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டது பற்றிய தகலை சபாநாயகர் அப்பாவும் விரிவாக எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி” என்று, குறிப்பிட்டார்.
“நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என்றும், நீட் தேர்வு மாணவர்களுக்கு உரிய தகுதிக்கு அங்கீகாரம் இல்லை” என்றும், கவலைத் தெரிவித்தார்.
“உயர் மட்ட குழுவின் அறிக்கையை ஆளுநர் ஒருதலைபட்சமாக அணுகியுள்ளார் என்றும், நீட் தேர்வு முறையானது” என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக, “உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று ஆளுநர் கூறியுள்ளார் என்றும், தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு அனுப்பிய அறிக்கை ஏற்புடையதாக இல்லை” என்றும், ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்” என்றும் தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, “நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை” என்றும், பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.
தற்போது, தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சார்பாக, அந்தந்த கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து பேசி வருகின்றனர்.