“736 மில்லியன் பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள்!” ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்..
“உலகில் 736 மில்லியன் பெண்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்” என்று, ஐநா சபை அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அத்துடன், சமூக வீதிகளில் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் வீடுகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் அலுவலகங்கள், பெண்கள் நடந்து செல்லும் தெருக்கள் வரையிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்த இருக்கிறது.
இதன் மூலமாக, “பெண்களுக்கு இந்த உலகில் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்கிற நிலை தான் ஏற்பட்டு வருகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அந்த சூழலில் தான், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஒழிப்பதற்காகவும், உலக அளவில் பெண்களின் மீது நடத்தப்படும் வன்புணர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பெண்கள் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்றைய தினம் பெண்கள் சர்வதேசம் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், “பல ஆண்டுகளாகப் பெண்களின் மீது நடத்தப்படும் குற்றங்கள் அதிகரிக்கிறதே தவிரக் குறையவில்லை என்றும், இந்த கொரோனா காலங்களின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளது” என்றும், ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பான United Nations Women அறிக்கை வெளியிட்டு, தனது கவலையையும் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக United Nations Women வெளியிட்டு உள்ள அறிக்கையில், “உலகளவில் சுமார் 736 மில்லியன் பெண்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது உடல் ரீதியாக பாலியல் வன்புணர்வுக்கும் ஆளாகி வருவதாக” அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அத்துடன், “இவற்றில் பல குற்றங்கள் அவர்களது கணவன் அல்லது துணையினால் ஏற்படுபவை” என்றும், இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், “இது போன்று பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் வீடுகளில் மட்டுமன்றி, அலுவலகங்கள் முதல் தெருக்கள் வரையிலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது என்றும், முக்கியமாக இந்த கொரோனா காலங்களில் பல நாடுகளில் குடும்ப வன்முறை காரணமாக அவசரக்கால உதவி எண்களைப் பலரும் அணுகி உள்ளனர்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “இங்கிலாந்தில் குடும்ப வன்முறை மற்றும் வன்புணர்வு குற்றங்கள் 24 மணி நேரத்தில் 120 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக, அந்நாட்டின் உதவி எண்களின் அறிக்கையின் மூலம் தெரிய வந்திருப்பதாகவும், ஐநா சுட்டிக்காட்டி இருக்கிறது.
முக்கியமாக, “இந்தியாவிலும் குடும்ப வன்முறை குற்றங்கள் முன்பை காட்டிலும் தற்போது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதாகவும்” குறிப்பிட்டு உள்ளது.
“அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 2,960 குடும்ப வன்முறை குற்றங்கள் பதிவாகி உள்ளது என்றும், இது 2020 ஆம் ஆண்டில் 5,297 குற்றங்களாக அதிகரித்து இருப்பதாகவும், இந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் மட்டுமே சுமார் 1,463 குற்றங்கள் பதிவாகி இருப்பதாகவும்” அதிர்ச்சி தரும் தகவல்களை ஐநா வெளியிட்டு இருக்கிறது.