ரஷ்யா - உக்ரைன் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! “4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது?”
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நாடைபெற்ற 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுக்கத் தொடங்கிய நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 12 நாட்களை கடந்து, 13 நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் நிலையில், “மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக” ரஷ்யா கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது.
ஆனாலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், உக்ரைன் நாட்டை விட்டு, கிட்தட்ட 17 லட்சம் பேர், அந்நாட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
முக்கியமாக, உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இது வரை 406 பொது மக்கள் உயிரிழந்து உள்ளனர் என்று, உக்ரைன் அறிவித்து உள்ளது.
அத்துடன், உக்ரைனில் இன்று 13 வது நாளாக தாக்குதலை தொடரும் ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ், கார்க்கிவ், மரியுபோல், சுமி ஆகிய நாகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது நேரத்தில், பொது மக்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் குறிப்பிட்ட வேறு சில இடங்களில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ரஷ்யா - உக்ரைன் இடையே முன்னதாக நடைபெற்ற 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தையிலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற முதல் 2 கட்ட அமைதி பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில், தற்போது நடைபெற்ற 3 கட்ட பேச்சு வார்த்தையிலும் எந்த சமரசமும் ஏற்பாடமல் தோல்வியில் முடிவடைந்து உள்ளதால், ரஷ்ய படைகள் நடத்தும் தாக்குதல் தற்போது கடும் உக்கிரமாகி வருகிறது.
இந்த நிலையில் தான், இந்த பேச்சு வார்த்தை தொடர்பாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கேல்லோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளி உரையாடலில், “போர் நிலைமையை சரிசெய்ய இன்னும் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று, குறிப்பிட்டார்.
மேலும், “மனிதாபிமான அடிப்படையிலான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும், அதன்படி ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள உதவிகளை நாங்கள் பெறுவோம்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
“போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை தொடரும் என்றும், அவர் கூறினார்.
அதே போல், “ரஷ்ய தரப்பிலும் பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை” என்கிற தகவலே கூறப்படுகிறது.
அதன் படி, ரஷ்ய தரப்பில், “தங்களது எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படலாம்” என்றும் ரஷ்ய பிரதிநிதி தற்போது கூறி உள்ளார்.
குறிப்பாக, ரஷ்யா - உக்ரைன் இடையே இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் வரும் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்து 4 வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“இந்த பேச்சு வார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எட்டப்படலாம்” என்றும், துருக்கி அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.