தமிழகம் முழுவதும் 2,000 மினி க்ளினிக் - என்னென்ன வசதிகளெல்லாம் எதிர்ப்பார்க்கலாம்? #ExpertOpinion
By Nivetha | Galatta | Sep 09, 2020, 03:06 pm
தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று முன்பைவிட வேகமாக பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில், கொரோனாவை பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப் 8 -ம் தேதி காலையில் நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் அனைத்துதுறை செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, அப்போது `கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது' என்று கூறினார்.
இந்த மினி கிளினிக்கில் (Mini Clinic) மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் பணியாற்றுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த மினி கிளினிக்கில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மட்டுமன்றி, வேறு என்ன மாதிரியான சலுகைகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என்பது பற்றி அரசு தரப்பு மருத்துவரொருவரிடம் கேட்டோம்.
``இந்த மினி கிளினிக், கொரோனா காலத்துக்கு மட்டுமன்றி, நீண்ட காலத்துக்கும் இருக்கும் என்று நம்புறேன். ஏன் சொல்றேன்னா, இன்னைக்கு தேதிக்கு ஒரு ஒன்றியத்துக்கு, 5 - 6 ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால் இதன் தேவை, இன்னும்கூட அதிகமாவே இருக்கு. இப்போதைக்கு தமிழகத்தில் இதுவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1806 இருக்கு. ஆனா இதை இன்னும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கு.
அதுக்காக ஊர் பகுதிகள்ல, ஆரம்ப சுகாதார நிலையமேதான் நிறுவப்படனும்னு அவசியம் இல்லை. ஒவ்வொரு பஞ்சாயத்து சார்பிலும், அடிப்படை தேவைகள் மட்டும் இருக்கம்படி சின்னதா ஒரு கிளினிக் அமைக்கப்பட்டா கூட, அதுவே போதும். உதாரணத்துக்கு எப்படி தனிப்பட்ட முறையில மருத்துவர்கள் சின்ன சின்னதா ஊர் பக்கம் கிளினிக் வச்சிருக்காங்களோ, அதேபோல ஒரு குட்டி கிளினிக் அரசு சார்பில் நிறுவப்பட்டாலேவும், மக்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.
இதுக்கு அதிகப்பட்ச தேவையெல்லாம் ஒரு சின்ன கட்டடமும் - சில மருத்துவர்களும் - செவிலியர்களும் - பராமரிப்பாளர்களும்தான். ஆரம்ப சுகாதார நிலையம் அளவுக்கு, இது 24 மணி நேர சேவை வழங்கப்படும் இடமா இருக்க வேண்டிய தேவை இல்லை. காலையும் மாலையும் சிகிச்சை அளிக்கப்பட்டால் கூட போதுமானதா இருக்கும். அதேபோல ஆரம்ப சுகாதார நிலையம் அளவுக்கு 5,6 மருத்துவர்கள் இருக்கணும் என்ற தேவையும் இல்லை. மாறாக 2 மருத்துவர்கள், அவர்களுக்கான செவிலியர்கள் இருந்தாலேவும் போதும். இந்த கிளினிக்ல, அவசர கால முதலுதவி சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை - தாய் சேய் நல மருத்துவ உதவிகள் - எந்தவொரு நோய்க்குறியையும் கண்டறிவதற்கான வசதிகள் போன்றவையெல்லாம் தாராளமாக தரப்படலாம்.
ஒரு மருத்துவரா, இந்த வசதிகளெல்லாம்தான் முதல்வர் சொல்லியிருக்கும் கிளினிக்ல இருக்கும்ங்கறது என்னோட நம்பிக்கை.
இப்படியான அடிப்படை வசதிகளுக்கான கிளினிக்கை, தமிழகம் முழுவதும் திறப்பதால அரசால் நிறைய மக்களை நேரடியாக சென்றடைய முடியும். ஏழை எளியோர் தொடங்கி ரிமோட் ஏரியாவில் இருக்கும் நபர்கள் வரை அனைவருக்குமே மருத்துவ சேவை கிடைக்கும். இன்றைய தேதிக்கு, இந்தியாவிலேயே தமிழகம் தான் சுகாதாரத்துறை சேவையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலை இன்னும் இன்னும் முன்னேறும்.
கொரோனாவை பொறுத்தவரை, இது இன்னும் சில வருடங்கள் வரை கூட இருக்கலாம் என்கிறார்கள் W.H.O..-வினர். மருத்துவர்களா எங்களோட கணிப்பும் அதுதான். அதேபோல, அடுத்து மற்றுமொரு பேண்டெமிக் வரலாம் எனக்கூறி, அதற்கு நம்மை தயாராக சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து தான் அவர்கள், உலக நாடுகள் அனைத்திடமும் `உங்களுடைய சுகாதாரத்துறை வலிமைப்படுத்தி கொள்ளுங்கள்' என சொல்லி சொல்லிக் கொண்டே இருக்கிறது.
அப்படியிருக்கும்போது, தமிழக அரசு இப்படியொரு முன்னெடுப்பை தொடர்ந்திருப்பது, ரொம்பவும் பாராட்டத்தக்க விஷயம். இது மழைக்காலம் என்பதால, டெங்கு மாதிரியான மழைக்கால தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பும் நிறையவே இருக்கு இங்க. இந்த நேரத்துல, இப்படியான கிளினிக் ஆரம்பிப்பது, அந்தந்த நோய்களுக்கான விழிப்பு உணர்வை, அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க உதவும்"
என்றார் அவர்