``உலகிலேயே தமிழகத்தில் தான் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகளவில் உள்ளன" - அமைச்சர் பெருமிதம்!
By Nivetha | Galatta | Sep 19, 2020, 05:22 pm
உலகிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கைகள் அதிகளவில் சிறப்புடன் இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்தவே முதல்வர் களத்திற்கு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று (செப்.18) அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1 லட்சத்து 42 ஆயிரம் படுக்கைகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் உயிரிழப்புகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்தவே முதல்வர் களத்திற்கு செல்வதாகவும் அவர் கூறினார்.
இதுபற்றி அவர் பேசும்போது, "வளர்ந்த நாடுகளில் கூட படுக்கை வசதிகளுக்குத் திணறினர். தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தனர். உலகிலேயே தமிழகத்தில் தான் யார் ஒருவருக்கும் படுக்கை வசதியில்லை என கூறாமல், படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறி பெருமிதப்பட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சிறப்பு படுக்கை வசதிகள் குறித்து பேசியிருக்கும் அமைச்சர், முன்னதாக கொரோனா தொற்று பாதிப்புக்கு வாய்ப்புள்ளவா்களை மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்த 120 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வாா்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடக்கி வைத்தாா்.
செய்தியாளா்கள் சந்திப்பின் போது அவரின் கூறியதாவது :
``தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1.42 லட்சம் படுக்கை வசதிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரம் படுக்கையில் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நபருக்கு நுரையீரல் பாதிப்போ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருந்தால் அவா்களுக்கு சிகிச்சை அளிக்க 120 படுக்கை வசதிகள் உள்ள புதிய வாா்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சிறப்பு வாா்டுகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மட்டுமன்றி மற்ற சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் டிராக்டா் விபத்தில் முகம், கை சிதைந்த சிறுவனுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயா் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் தற்போது நலமுடன் உள்ளாா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பாதிப்பு 30 சதவீதமாக இருந்தது. தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்த விகிதம் முன்பிருந்ததை விட 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
பொது முடக்கத்தில் தளா்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடா்ச்சியாக ஏற்படும் கொரோனா பரவலின் தாக்கம் 2 அல்லது மூன்று வாரங்களில் தான் வெளியே தெரியும். அந்த வகையில் தளா்வுகள் வழங்கப்பட்டு 2 வாரங்கள்தான் முடிந்துள்ளன. அடுத்த வாரத்துக்கு பின்னா்தான் கொரோனா தாக்கத்தின் தன்மை எவ்வாறு உள்ளது என தெரியவரும். தமிழக அரசு எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க தயாா் நிலையில் உள்ளது. மருத்துவ சிகிச்சை முறைகளில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தான் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன" என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியின்போது சுகாதாரத்துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள தரவுகளுக்கும், மத்திய அரசின் புள்ளிவிவரத்துக்கும் முரண்பாடுகள் நிலவுகின்றன. இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்,
``தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை விவரங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின்(ஐ.சி.எம்.ஆா்.) இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கம். அதற்கான பணிகளை மேற்கொள்ள வெவ்வேறு ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதனால், சில நேரங்களில் உரிய நேரத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. அந்த கால தாமதத்தால்தான் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டு வரும் தகவல்கள்தான் உண்மையானவை" என்றாா்.