மீ டூ விவகாரம் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்தேறி வருகிறது. இதன் கீழ் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான லீனா மணிமேகலை தானும் இயக்குனர் சுசி கணேசனால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். கந்தசாமி, திருட்டுபயலே ஆகிய படங்களை இயக்கியவர் சுசி கணேசன் என்பது குறிப்பிடதக்கது. லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு வலை தளத்தில் தீயாய் பரவியது. மேலும் தன் மீது தவறான குற்றசாட்டை சுமத்துகிறார் என்று நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார் இயக்குனர் சுசி கணேஷன்
இதையடுத்து லீனா மணிமேகலை தனது சமூக வலைதளத்தில் சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார். மேலும் பிரச்சனை தீவிரமடைந்தது. இதையடுத்து இயக்குனர் சுசி கணேசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலை மீது புகார் அளித்திருந்தார். அந்த விசாரணையில் லீனா மணிமேகலை சுமத்திய குற்றசாட்டு பொய்யானது. காழ்புணர்ச்சி காரணமாகவே அது போல அவர் பதிவிட்டுள்ளார் என்று தெரியவந்தது. பின் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், புகாரை முடித்து வைத்து நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது காவல்துறை. இதனையடுத்து லீனா மணிமேகலையின் குற்றசாட்டு தவறானது என்று தெரிய வந்து இணையத்தில் பலர் தங்கள் கருத்துகளை காட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் லீனா மணிமேகலை, தனது ட்விட்டர் பக்கத்தில்,
“என் #metoo வாக்குமூலத்தின் அடிப்படையில் சுசிகணேசன் தொடர்ந்திருக்கும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சட்டத்திற்குப் புறம்பாக என் பாஸ்போர்ட்டை முடக்கியதை எதிர்த்து நான் தொடுத்த வழக்குகளை வென்று தற்போது கனடாவில் டோரோண்டோ பல்கலை கழகத்தில் Artist in Residence - ஆக பணிக்கப் பட்டிருக்கிறேன். மாஜிஸ்ட்ரேட்டை மாற்றக் கோரி நான் கேட்டிருந்த விண்ணப்பத்தையும் நேற்று சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மீடியா பரப்பிக்கொண்டிருக்கும் #fakenews விஷமத்தனமானது - கண்டனத்திற்குரியது. இதன் பிண்ணனியில் யார் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. போன வருட ஆரம்பத்தில் சுசிகணேசனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நான் போட்ட ட்வீட்டிற்கு எதிராக போலீஸில் புகார் தரப்பட்டது. அதற்கு என் வழக்கறிஞர் தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அந்த புகார் செல்லுபடியாகியிருந்தால் என் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கும். பொய் என்பதால் நீர்த்துப்போனது. தொடர்ந்திருக்கும் வழக்கை நடத்தாமல் இந்த மாதிரியான கீழ்த்தரமான செயல்களை சுசிகணேசன் செய்வதும் அதற்கு துணை போகும் மீடியாக்களும் அதற்கான சட்ட நடவடிக்கைகளை சந்திப்பார்கள் என எச்சரிக்கிறேன். இன்று சர்வதேச பெண்கள் தினமாம். வாழ்த்துகள். நன்றி” என்று குறிபிட்டுள்ளார்.
My statement. Media who spread #fakenews and whoever is behind this malicious propaganda will face legal consequences. International Women’s Day Wishes #metoo pic.twitter.com/3LsK9oIZoE
— லீனா மணிமேகலை (@LeenaManimekali) March 8, 2023
லீனா மணிமேகலை மீது இயக்குனர் சுசி கணேசன் பதிவு செய்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் லீனா மணிமேகலை. தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லீனா மணிமேகலை. இருவருக்கும் இடையே இருக்கும் விவகாரம் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் லீனா மணிமேகலை பிரபல சுயாதீன பட இயக்குனர், அவரது முந்தைய படைப்புகள் உலக நாடுகளின் மேடையேறி பல விருதுகளை குவித்துள்ளது. மேலும் இவரது முழு நீள திரைப்படமான ‘மாடத்தி’கடந்த 2021 வெளியாகி விமர்சன ரீதியாக கவனம் பெற்றது. தற்போது லீனா மணிமேகலை ‘காளி’ என்ற சுயாதீன படத்தை நடித்து இயக்கவுள்ளார். இதுதொடர்பான முதல் பார்வை வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு வழக்குகள் இது தொடர்பாக லீனா மணிமேகலை மீது போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.