தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து அதிரடியான திரைப்படங்களில் நடித்தும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே அமைத்திருப்பவர் தான் நடிகர் விஷால். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் விஷால்36 திரைப்படத்தில் விஷால் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. வித்தியாசமான டைம் டிராவல் கான்செப்டில் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் SJ.சூர்யா மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன், சுனில் வர்மா, அபிநயா ரித்து ரெடின் கிங்ஸ்லி Y.Gee.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படத்தின் ரிலீசுக்கான அனைத்து பணிகளிலும் படக்குழுவினர் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த நடிகர் விஷால் அவர்கள் தனது திரைபயணத்தின் பல சுவாரஸ்ய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, "ஒரு நடிகராக உடல் ரீதியில் எவ்வளவு வலுவாக இருக்கிறீர்களோ அதே போல் மன ரீதியிலும் வலுவாக இருக்க வேண்டும் அல்லவா அதற்காக உங்களை எப்படி தயார் படுத்திக் கொள்கிறீர்கள் நிறைய விமர்சனங்கள் வரும் நிறைய சர்ச்சைகள் வரும் அதை எப்படி கையாளுகிறீர்கள்? ஏனென்றால் நீங்கள் உடல் ரீதியாக வலுவாக இருக்கிறீர்கள் மன ரீதியில் எவ்வளவு வலுவாக இருக்கிறீர்கள்?" என கேட்டபோது,
"நான் ஒரு மன நல சிகிச்சையாளரிடம் செல்வேன். இதில் ஒளிவு மறைவு கிடையாது எல்லோரும் நினைக்கிறார்கள் மன நல மருத்துவரிடம் சென்றால் பைத்தியக்காரன் என்று நினைப்பார்கள் என நினைக்கிறார்கள். அதெல்லாம் தவறு… நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். சொல்லப்போனால் நான் நடிகர் கார்த்தியிடம் கூட சொல்லி இருக்கிறேன். நடிகர் சங்கத்தின் சார்பில் கவுன்சிலிங் கொடுக்கலாம் என சொல்லி இருந்தேன். நடிகர்கள் நடிகைகள் சின்னத்திரையில் நடிப்பவர்கள் என அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கலாம் அது மிகவும் முக்கியம். நான் ஒரு முறை சிகிச்சை பெற்று வந்ததும் மிகவும் லேசாக உணர்கிறேன். ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல் இருக்கும். நான் இதை ஏதும் தவறாக உணரவில்லை இதை சொல்வதில் எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. மேலும் ஒரு கட்டத்தில் இது உங்களுக்கு தேவைப்படுகிறது. நீங்களே ஒரு கண்ணாடியை பார்த்து பேசுவதை விட வேறு ஒருவரிடம் பேசி அவர் தரப்பில் இருந்து அந்த விஷயத்தை பார்க்கும் போது அது உங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நான் அதை செய்கிறேன்! மேலும் ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ மன வலிமை மிகவும் அவசியம்.” என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் விஷாலின் அந்த முழு பேட்டி இதோ…