அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அந்த வகையில் இயக்குனராக துப்பறிவாளன் - 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கும் நடிகர் விஷால் தற்சமயம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் 34 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த நடிகர் விஷால் அவர்கள் தனது திரைபயணத்தின் பல சுவாரஸ்ய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, புதுமுகமாக திரைத்துறைக்குள் வரும் நடிகர் நடிகைகளுக்கு அறிவுரை என்று இல்லாமல் முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்வதாக "பொறுமை" குறித்து நடிகர் விஷால் பேசியிருக்கிறார். முன்னதாக மனரீதியாக எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், மன ரீதியில் தன்னை வலிமையாக வைத்துக் கொள்வதற்கு மனநல மருத்துவரை சந்திப்பது குறித்தும் நடிகர்கள் குறிப்பாக மனரீதியாக மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்த நடிகர் விஷால் தொடர்ந்து பேசியபோது,
“ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ மன வலிமை மிகவும் அவசியம். நான் சொல்லும் ஒரு அறிவுரை என்று சொல்ல முடியாது புதுமுகங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் ஜிம்முக்கு செல்லலாம், நடன பயிற்சி, சண்டை பயிற்சி, ஜிம்னாஸ்டிக், பியூட்டி பார்லர் போவது அதெல்லாம் சரி… அதை விடுங்கள் “பொறுமை” என்கிற ஒரு விஷயம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்கே நான் நடிக்க வேண்டும். நாளைக்கே நான் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் அப்படியெல்லாம் இல்லாமல், எப்போது வருகிறதோ கடவுள் எல்லோருக்கும் ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருப்பார் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் செயல்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கான இடத்தை சேருவீர்கள் இல்லையென்றால் நீங்கள் மிகவும் வருந்தி, .என்னடா இது ஆறு மாதமாக வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறோம்’ என நினைத்தால் அது தவறு…” என பேசி இருக்கிறார். மேலும் தனது திரைப்பயணம் குறித்தும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்தும் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் விஷாலின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.