இசையமைப்பாளராகவும் நடிகராகவும் மக்களின் மனம் கவர்ந்த விஜய் ஆண்டனி இயக்குனராக அவதாரம் எடுத்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது மோசமான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்திருக்கும் விஜய் ஆண்டனி நமது கலாட்டா பிளஸ் சேனலில் நடைபெற்ற பிரத்யேகப் பேட்டியில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு உரையாடினார். அந்த வகையில், பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்தும் அந்த விபத்திற்கு பிறகான தனது மனநிலை குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில்,
“நீங்கள் அந்த விபத்திற்கு பிறகு ஒரு ட்வீட் போட்டிருந்தீர்கள்.. “முன்பு இருந்ததை விட மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்பது போல, ஒரு ட்வீட் போட்டிருந்தீர்கள், அது ஏன் என விவரிக்க முடியுமா?” என கேட்ட போது,
“ஆமாம் போட்டிருந்தேன். எனக்கே தெரியவில்லை, புரியவில்லை… ரொம்ப பெரிய ஒரு மன அமைதி இருக்கிறது நன்றாக இருக்கிறேன். நான் பணியாற்றும் ஸ்டைல் மாறி இருக்கிறது. என்னுடைய உதவி இயக்குனர்களோடு CLOUDல் பணியாற்றுகிறேன் … யாராவது என்னை பார்க்க வேண்டும் என வந்தால் கூட, “பரவாயில்லை சார் நீங்கள் வீடியோ காலில் வாருங்கள் பேசலாம்” என்பது போல எல்லாமே வேகமாக முடிவெடுக்கிறேன். என்னுடைய பேச்சு , பதில் வேகமாக இருக்கிறது. என் உதவியாளர்களுடன் பணியாற்றுவது இன்னுமே டெவலப்பாகி இருக்கிறது. முன்பு செய்வதை விட, எதிரே அமர்ந்து கலந்து ஆலோசித்து பணியாற்றுவதை விட, CLOUDல் நான் பணியாற்றுவது மிகவும் வேகமாக இருக்கிறது. அப்புறம் மிகவும் சாந்தமாக இருக்கிறது. மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கிறது. இன்னும் பெரியதாக ஏதாவது நடக்கும் என்பது போல இருக்கிறது. ஏற்கனவே எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருக்கிறது." என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த விபத்து நடந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்வது போல் இருக்கிறதே?” என கேட்க, “ஆமாம் அப்படித்தான் இருக்கிறது. நிறைய பேர் வருத்தப்பட்டு அப்படியே ஆறுதல் சொல்ல வருவார்கள். ICUவில் இருக்கும் போதே அதை தான் சொன்னேன். அதாவது எனக்கு இவ்வளவு தூரம் ஆகிவிட்டது என முகத்தை கூட நான் சரியாக பார்க்கவில்லை. அதற்கு முன்பு முதல் முறை ICUவில் கண் திறந்து பார்க்கும் போது, நிறைய பேர் வந்து அப்படியே பரிதாபமாக பார்க்கிறார்கள். “என்ன விபத்து தானே தைரியமாக இருக்கிறேன் போங்கள்” என கைகாட்டி அனுப்பினேன். அப்புறம்தான் பார்த்து கொஞ்சம் மெதுவாக தான் தெரிந்து கொண்டேன். நான் எனக்கு என்ன ஆயிற்று என கேட்கவே, குரல் இருந்தால் தானே கேட்க முடியும். சத்தம் வராது அப்படி இருக்கும் போது ஒரு மூன்று நாட்கள் கழித்து தான் எப்படி நடந்தது என்று கேட்டுக் கொண்டேன். பிறகு இன்னும் கொஞ்ச நாள் கழித்து தான் விவரமாக கேட்டு தெரிந்து கொண்டேன். இப்போதும் பெரிதாக ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. நன்றாக தான் இருக்கிறேன். அனவரிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் ரொம்ப நன்றாக இருக்கிறேன்.” என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனியின் அந்த முழு பேட்டி இதோ…