தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக திகழும்  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் காக்கி, தமிழரசன், அக்னிசிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். மேலும் இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

கொலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஏப்ரல் 6) வெளியானது. அடுத்ததாக தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிறது ரத்தம் திரைப்படம். விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகைகள் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பொலிட்டிகல் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் ரத்தம் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் என்.கண்ணன் இசையமைக்கிறார். இந்நிலையில் ரத்தம் படத்தின்  இந்திய படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிகட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.