தனக்கென தனி பாணியில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் விரும்பும் வகையிலான அழகான FEEL GOOD திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறையாக அஜித்குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏதோ சில காரணங்களால் இத்திரைப்படம் நடைபெறாமல் போனது. எனவே தனது இயக்கத்தில் அடுத்த திரைப்படமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதனிடையே நமது கலாட்டா தமிழில் தற்போது தொடங்கப்பட்டிருக்கும் கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணலில், கலந்து கொண்டு, நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் அவர்களோடு உரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன் சுவாரஸ்யமான பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அந்த வகையில் தனது அப்பாவை இழந்த கடினமான நேரத்திலும் தான் சினிமாவிற்குள் செல்ல விரும்பிய போது அதனை புரிந்து கொண்டு தனக்கு உறுதுணையாக இருந்த தனது அம்மா குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நம்மோடு பகிர்ந்து கொண்டார். முன்னதாக பள்ளி - கல்லூரியில் படிக்கும் சமயத்திலேயே தனக்கு இசை மற்றும் சினிமாவில் அதிகம் ஆர்வம் இருந்ததாகவும் இது குறித்து அப்பாவை இழந்த பிறகு, தான் சினிமா தேர்ந்தெடுக்க நானும் அம்மாவும் பேசிய போது, “உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்” என அம்மா கூறியதாக விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனிடம், “அப்படி என்றால் உங்கள் அம்மாவிற்கு அப்போது உங்களிடம் ஏதோ ஒரு SPARK தெரிந்திருக்கிறது அதனால் தான் இப்படி முடிவு எடுத்தார்களா?” என கேட்ட போது, "SPARK பார்த்து முடிவு செய்வது அந்த மாதிரி எல்லாம் இல்லை... என் அம்மா எப்படி என்றால் பசங்களை சுதந்திரமாக விடுவார் ஒருவேளை இப்போது நான் அன்று சொன்னது போல் வெற்றிகரமாக இல்லை என்றாலும் அவர் அப்படியே தான் இருப்பார். அதே அன்பும் அரவணைப்பும் இருக்கும் உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய். அந்த நேரத்தில் ஒரு அழுத்தம் இருந்தது திடீரென அப்பா இல்லையென்றால் குடும்பம் நடத்தும் நிலை மாறிவிடும். ஒரு படி கீழே போகும்… என என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை சரி செய்ய குழந்தைகள் மீது தான் எல்லாம் சொல்வார்கள் அது தானே இந்த வாழ்க்கை முறையே... ஆனால் அந்த நேரத்தில் என்னம்மா என்ன சொன்னார்கள் என்றால், “உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை செய் மற்ற எதை நினைத்தும் நீ கவலையே படாதே!” என்றார். அதிலிருந்து நாங்கள் ஒரு படி கூட கீழே வரவே இல்லை. அப்பா இல்லை என்ற ஒரு காரணத்திற்காக எந்த விதமான மாற்றமும் இன்றி முன்பு எப்படி இருந்தோமோ அப்படியே இருந்தோம். அந்த அளவிற்கு அம்மா பார்த்துக்கொண்டார்.” என விக்னேஷ் சிவன் பதிலளித்தார். கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்னேஷ் அவனின் அந்த முழு பேட்டி இதோ…