பிரபல தமிழ் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்!
By Anand S | Galatta | April 29, 2022 21:02 PM IST
தமிழ் திரை உலகின் மூத்த நடிகைகளில் ஒருவராக பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை ரங்கம்மாள் பாட்டி. புரட்சித் தலைவர் நடிகர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த விவசாயி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரங்கம்மாள் பாட்டி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
இதனையடுத்து தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அஜித் குமார், தளபதி, விஜய் மற்றும் பிற இளம் கதாநாயகர்களின் திரைப்படங்கள் வரை பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் குணசித்திர வேடங்களிலும் ரங்கம்மாள் பாட்டி நடித்துள்ளார்.
குறிப்பாக நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரங்கம்மாள் பாட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த சில காலமாக சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வறுமையிலும் உடல்நலக் குறைவாலும் வாடிய ரங்கம்மாள் பாட்டி தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் அவிநாசியை அடுத்த தெலுங்குபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாகவும் உடல் நலக்குறைவு காரணமாகவும் இன்று ஏப்ரல் 29-ம் தேதி ரங்கம்மாள் பாட்டி தனது 83-வது வயதில் காலமானார். ரங்கம்மாள் பாட்டியின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
#RIPkuttima #riprangamma #actresskuttima #actressrangamma pic.twitter.com/aMRVfZUefb
— nadigarsangam pr news (@siaaprnews) April 29, 2022