இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்! விவரம் உள்ளே
By Anand S | Galatta | August 03, 2022 12:46 PM IST
இந்திய சினிமாவில் தற்சமயம் பல இயக்குனர்கள் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். ஆனால் இந்திய சினிமாவைப் பொருத்தவரை பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் இயக்குனர் ஷங்கருக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களின் கனவுகளை தனது படைப்புகளின் மாயாஜாலத்தால் திரையில் கண்முன் நிறுத்துவது ஷங்கரின் வழக்கம்.
வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் சிறந்த படைப்புகளை தயாரித்துள்ள இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வெளிவந்த வெயில் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் #RC15 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கதையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். முன்னதாக இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் தடைபட்ட நிலையில், தற்போது தடைகள் நீங்கி விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக தமிழகத்தின் முன்னணி பல்கலைகழகங்களில் ஒன்றான வேல்ஸ் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னையின் பல்லாவரத்தில் அமைந்திருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த பட்டமளிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
#VelsUniversity is happy to honour highly talented National Award-winning filmmaker, @shankarshanmugh with a doctorate in a grand ceremony going to happen in Vels University, Pallavaram#DrShankar @IshariKGanesh pic.twitter.com/WgdyNwwUcN
— Done Channel (@DoneChannel1) August 2, 2022