தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமண மண்டபத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அணங்காநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவருக்கும், அவருடைய உறவினரான வாணியம்பாடியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ishwaria

இந்நிலையில், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமணத்திற்கு முதல் நாள் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, காலையில் திருமணத்திற்கு முன்பாக, பெண்ணுக்குத் திருமண சடங்கு நடைபெற்றது. பின்னர், திருமண பட்டுச்சேலை கட்டிவர மணப்பெண், தன்னுடைய அறைக்குச் சென்றுள்ளார்.

பட்டுச்சேலை கட்டிவரச் சென்ற மணமகள், வெகு நேரமாகியும் வெளியே வராததால், உறவினர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Gudiyatham Police Station

தாலி கட்டும் நேரத்தில் மணமகள் தப்பிச்சென்ற தகவல், மண்டபத்திலிருந்த அனைவருக்கும் பரவியது. இதனையடுத்து, உறவினர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால், மணமகன் மற்றும் மணமகன் வீட்டார் செய்வதறியாது தவித்தனர்.

இதனையடுத்து, மணமகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசா் விசாரிக்கையில், டிரைவர் நீலகண்டன் என்பவருடன் மணப்பெண் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நீலகண்டனின் பெற்றோரைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.