வெள்ளைப்பூக்கள் திரைப்பட விமர்சனம் !
By Sakthi Priyan | Galatta | April 17, 2019 12:03 PM IST
தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இதில் என்ன சந்தேகம், இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வெள்ளைப்பூக்கள். இந்த படத்தை விவேக் இளங்கோவன் இயக்கிருக்கிறார்.
சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில் ருத்ரன் எனும் பாத்திரத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் விவேக், அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் மற்றும் மருமகளை சந்திக்கச்செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் நபர்கள், அவர் வசிக்கும் இடத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கதை நகர்கிறது. இதுதான் கதைச்சுருக்கம். சென்ற இடத்தில் அவருக்கும் கிடைக்கும் நண்பராக வரும் சார்லியின் நடிப்பு சூப்பர்.
ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால் தனது பேச்சிலும் நடிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் நடிகர் விவேக். வயதான கதா பாத்திரம் ஏற்று நடிக்கும் போது, நடை பாவனை, பேச்சில் நிதானம் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.
என்னதான் வெளிநாட்டில் படத்தின் காட்சிகளை படம்பிடித்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் சில சில பிசுறுகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக எடிட்டிங் பணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு ஏற்ற பின்னணி இசை இருந்தாலும் அடிக்கடி ஒலிப்பது போலவே உள்ளது.
மெல்லமாக போகும் முதல் பாதிக்கு சரியான தீனிபோடும் வகையில் அமைந்திருக்கிறது படத்தின் இரண்டாம் பாதி. படத்தில் வரும் வெள்ளைக்கார நடிகர்களின் நடிப்பு ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை. கதைக்கு தேவையானவாறு அமைந்துள்ளது.
ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக இருக்கும் என்றே கூறலாம். படத்தில் வரும் சில காட்சிகளை வேகப்படுத்தியிருக்கலாம். திரில்லர் படத்திற்கு மிகவும் முக்கியம் வேகம், அந்த வேகத்தை முதல் பாதியிலும் வைத்திருக்கலாம்.
நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் ஏற்று நடிக்கும் விவேக்கின் இம்முயற்சி பிற நடிகர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
கலாட்டா ரேட்டிங் - 2.5/5