வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘வாரிசு’. ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தில்ராஜு தயாரித்துள்ள இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், குஷ்பூ, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ‘வாரிசு’ படத்திலிருந்து இதுவரை ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘Soul of Varisu’ உள்ளிட்ட பாடல்கள் லிரிக்கல் வீடியோவாக வெளியாகியுள்ளன.

சுமார் 5 மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி) பேன் இந்தியா படமாக வெளியாகும் ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லர் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ‘விஜய் ராஜேந்திரன்’ என்ற உறுதிப்பூர்வத் தகவல்கள் இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கின்றன.

துபாயில் அமைந்துள்ள ‘Vox Cinema’ என்ற திரையரங்கில் இணைய டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் செயலியில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்செயலியில் அவரது பெயருடன், “Vijay Rajendran is a happy go lucky man. This change when his foster father dies unexpectedly” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் நீளம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் என்றும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் விஜய் ராஜேந்திரன் வளர்ப்புத் தந்தையால் வளர்க்கப்படுகிறார் என்பதும், அவரது மரணத்தின் மூலம் விஜய் ராஜேந்திரனின் மகிழ்ச்சியான வாழ்க்கை தடம் மாறுவதையும் யூகிக்கமுடிகிறது.   

இத்தகவல் இணையத்தில் பலரால் பகிரப்பட்டுவரும் நிலையில், இதற்குப்பின்னான இப்படத்தின் கதை குறித்த ஊகங்களும் இணையத்தில் றெக்கை கட்டி விஸ்தரித்துப் பறக்கத் துவங்கியுள்ளன. இந்த துணுக்குத் தகவல்களை மையமாய் வைத்து சிலர் வலைதளங்களில், “தன்னை வளர்த்த தந்தையின் மீது விஜய் ராஜேந்திரன் அதீத பாசம் வைத்திருந்து, வில்லன்களால் அவர் கொல்லப்பட்டவுடன் அவர்களைப் பழிதீர்க்க விஜய் சபதம் மேற்கொள்வது போல் கதையமைப்பு இருக்கலாம்” என்று தங்கள் ஊகங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிலர் ‘Soul of Varisu’ பாடலைத் தொடர்புபடுத்தி, “விஜய் ராஜேந்திரன் குழந்தைப் பருவத்தில் தன்னைப் பெற்ற தாயைப் பிரிந்து, வளர்ப்புத் தந்தையால் வளர்க்கப்பட்டு, பின் தந்தையின் மரணத்திற்குப் பின் தாயிடமே மீண்டும் சேருவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கலாம்” என்று ஊகிக்கின்றனர்.

ஆயினும் ‘விஜய் ராஜேந்திரன்’ என்ற பெயரைத் தவிர மற்ற தகவல்கள் உண்மையாயிருக்க வாய்ப்புகளில்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எதுவாயினும் ‘வாரிசு’ பட டிரெய்லர் வெளியாகும் பட்சத்தில் இத்தகவல்கள் குறித்த உண்மைத்தன்மை தெரிந்துவிடும். படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் டிரெய்லர் வெளியாகும் என்று தெரிகிறது.

 

#Thalapathy as Vijay Rajendran ☺️ Main screen la kandipa show podrom 🥁 #Varisu #VarisuAtRajendra #VarisuPongal pic.twitter.com/g4W6NQfNQO

— Umaa Rajendra Cinemas (@UmaaRajendra) January 2, 2023