தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக திகழும் வைகை புயல் வடிவேலு இன்று முதல்வரை நேரில் சந்தித்துள்ளார். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் 5 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகைப்புயல் வடிவேலு செய்தியாளர்களின் கேள்விக்கு மனம்திறந்து பதிலளித்தார்.

கொரோனா காலகட்டத்தில் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் தமிழக முதல்வரின் செயல்களும் மெய்சிலிர்க்க வைக்கிறது என புகழாரம் சூட்டிய வடிவேலு, மக்கள் முகக்கவசம் அணிவதிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் இன்னும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என தனக்கே உரித்தான பாணியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி நகைச்சுவையாக பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாவது குறித்தும், OTT தளங்களில் வெளியீடுவதற்காகவே திரைப்படங்கள் தயாரிப்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, இது திரைத்துறையின் வளர்ச்சியை காட்டுகிறது. முன்பு இருந்த திரைப்படத்துறை தற்போது மாறி இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல் நாமும் நம்மை மாற்றியுள்ளோம். அதுபோல் OTT என்பதும் திரைத்துறையில் ஒரு புதிய வளர்ச்சி அதற்கேற்ப  நாமும் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
அடுத்ததாக நடிகர் வடிவேலு நடிப்பில் OTT-யில் படங்கள் தயாராவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு OTT-யில் வெளியாகும் திரைப்படங்களில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளும் தற்போது  நடைபெறுகிறது. நல்லதே நடக்கும் என தெரிவித்திருக்கிறார். 

வெகு நாட்களாக  வைகைப்புயல் வடிவேலுவை தமிழ் திரைப்படங்களில் காண்பதற்காக கோடான கோடி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.