சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் கதாநாயகியாக அடா ஷர்மா நடிக்க இவருடன் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் யோகிதா பிஹாணி, சித்தி இத்னானி, சோனியா பலானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரஷான்தனு மொஹபத்ரா ஒளிப்பதிவு செய்ய பிக்காஷ் ஜோதி இசையமைத்துள்ளார்.
கேரளா இந்து பெண்களை ஏமாற்றி காதல் வலையில் விழ வைத்து அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி தீவிர வாதிகளாக மாற்றப் படுவதை கதை கருவாக கொண்டு உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலானது. அதே நேரத்தில் படத்தில் இஸ்லாமிய மதத்தினரை இழிவாக சித்தரித்துள்ளனர் என்ற எதிர்ப்பு கிளம்பி படத்தை தடை செய்ய பல அமைப்பினர்கள் ஆர்பாட்டம் செய்தனர். வங்கதேசத்தில் இப்படம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டது. பின் நீதி மன்றத்தை அணுகி தடையை விளக்கியது தி கேரளா ஸ்டோரி படக்குழு..
இருந்தாலும் தடைகளை தாண்டி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த மே 5 ம் தேதி வெளியானது. தமிழ் நாட்டில் இப்படத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்காததால் திரையரங்க உரிமையாளர்களே இப்படத்தை மாற்றினர். தென்னிந்தியாவில் பல இடங்களில் எதிர்ப்பை சந்தித்த தி கேரளா ஸ்டோரி. வட இந்தியாவில் மிகபெரிய ஆதரவினை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து மேலும் 37 நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது. அதன்படி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலகளவில் இதுவரை 200ரூ கோடி வசூல் குவித்து கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய திரைப்படங்களுக்கும் திரை கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் IFFA 2023 விருது விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு இந்தியாவின் ஆகசிறந்த பங்களிப்பிற்காக விருது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துபாயில் நடைபெறும் விழாவிற்கு சென்ற கமல் ஹாசன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அதில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து கமல் ஹாசன் அவர்களிடம் கேட்கப்பட்டது.
கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், “பிரச்சாரப் படங்களுக்கு நான் எதிரானவன் என ஏற்கனவே கூறிவிட்டேன். உண்மைக் கதை என்று படத்தின் போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தினால் மட்டும் போதாது. அது உண்மையாக இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல..” என்று தெரிவித்தார்.தற்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக கமல் ஹாசன் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.