இயக்குனர் மாரி செல்வராஜிடம் தனக்கு பிடித்த அரசியல் என்ன என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்து கொண்டார். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த மாமன்னன் திரைப்படம் நேற்று ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மாமன்னன் திரைப்படத்திற்கான முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து பெரும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தோன்றியது. முதல்முறையாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இணைந்த இந்த மாமன்னன் திரைப்படம் தான் அவரது திரைப்பயணத்தின் கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வைகைப்புயல் வடிவேல் அவர்கள் தனது திரை பயணத்தில் இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட அழுத்தமான கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்த மாமன்னன் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் பலம் கூட்டி இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் நடிகையும் இயக்குனருமான சுகாசினி மணிரத்தினம் அவர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். இந்த வகையில், "இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம் உங்களுக்கு பிடித்த அரசியல் என்ன?" என உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கேட்டபோது, “அவருடைய முதல் இரண்டு படங்களிலும் மிகவும் முக்கியமாக பேசப்பட்டது "சமூக நீதி" தான். ஒடுக்கப்பட்ட மக்களுடைய வலியை இவர் சொல்லி இருக்கிறார். அதற்காக அவர் யாரையும் குறை சொல்லவில்லை குற்றம் சொல்லவில்லை. ஒரு சமூக மக்களுடைய வலி.. அதை மனதில் வலிக்கிற மாதிரி பார்ப்பவர்கள் எல்லோருக்கும் வலிக்கிற மாதிரி சொல்லி இருக்கிறார். நான் பேச விரும்புகிற திராவிட அரசியலும் அதுதான். சமூக நீதிதான் திராவிட இயக்கங்களுடைய முக்கியமான கொள்கையை சமூக நீதி தான்.. அந்த ஒரு புள்ளியில் தான் எங்கள் இருவருக்கும் அந்த ஒரு புரிதல் ஏற்பட்டது. நிறைய காட்சிகள் எடுக்கும் பொழுது நான் கேட்பேன் சில வசனங்கள் சொல்லும் போது நான் கேட்பேன், “இதை வேறு மாதிரி மாற்றிக் கொள்ளலாமா?” எனக் கேட்பேன்.. “சார் சார் அது தப்பாகிவிடும் சார்” என்பார். நான் நினைத்திருந்தால் சில காட்சிகளை மாற்றி எடுத்திருக்கலாம் சில வசனங்களை நான் பேசுகிறேன் என கேட்டு இருக்கலாம் ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. “அது வேணாம் சார்” என்றார். நானும் திணித்து ஏதும் வைக்க வேண்டும் என விரும்பவில்லை. அந்த கதைக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.