மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான காட்சிகள் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்மைக்கு புறம்பாக துளியும் ஆதாரமற்ற நிகழ்வுகளை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டு வெளிவந்திருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. முன்னதாக டீசர், ட்ரெய்லர் வெளிவந்த சமயத்திலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கேரளாவில் கடுமையான கண்டனங்களில் எழுந்தன. அதிலும் குறிப்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள், ட்ரெய்லரை குறிப்பிட்டு “அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட பல பொய்களை பரப்புவது போல் தெரிவதாக” மிகக் கடுமையாக படக் குழுவினரை சாடினார். மேலும் இத்திரைப்படத்தை கேரளா அரசாங்கம் எதிர்ப்பதாகவும் அறிவித்தார்.
பாலிவுட்டில் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா ஷர்மா கதையின் நாயகியாக நடிக்க, சோனியா பலானி, யோகிதா பிலானி ஆகியோருடன் இணைந்து நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடந்த ஆண்டு (2022) வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னாணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “கேரளாவில் ஷாலினி உன்னிகிருஷ்ணன் என இந்து குடும்பத்தில் பிறந்த செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அதா சர்மா பின்னர் சூழ்ச்சியால் இஸ்லாமியர்களாலேயே இஸ்லாம் மதத்திற்கு பாத்திமா என மதம் மாற்றப்படுகிறார். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போல் காட்டப்படும் அவரிடம், "எப்போது ISISல் சேர்ந்தீர்கள்?" என விசாரணை நடைபெறுவது போல ட்ரெய்லரில், காட்சிகள் நகருகின்றன. ட்ரெய்லர் வெளிவந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் குறித்து மிகவும் தவறாக சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படம் வெளிவந்த பிறகு ஹிந்து பெண்களும் மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவமதிக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மத நல்லிணக்கத்தோடு இருக்கும் இந்தியாவில் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தும் வகையில் முழுக்க முழுக்க பிற்போக்குத்தனமான சிந்தனையில் உருவாகி இருக்கும் இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த மே 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரிலீஸ் ஆனது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருந்த காரணத்தினால் தமிழ்நாடு பிஜேபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் பேரில் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக திரையரங்குகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதாலும் நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதாலும் தமிழ்நாடு முழுவதும் இன்று மே 7ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (மே 7) ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக வளாகங்களுக்கு வரும் மக்களுக்கும் திரையிடப்பட்ட மற்ற திரைப்படங்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மீண்டும் நாளை திரைப்படம் திரையிடப்படுமா? அல்லது தொடர்ந்து காட்சிகள் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.