வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. உலகளவில் ரூ 250 கோடி வசூல் செய்த வாரிசு திரைப்படம் வெளியாகிய நாளிலிருந்து இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி, நடிகர் சரத்குமார், நடிகை ஜெயசுதா ஆகியோர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார். இதில் படக்குழுவினருடன் ரசிகர்கள் கேள்வியை எழுப்பினார்கள். அதில் ஒரு ரசிகர் இயக்குனர் வம்சியிடம் "உங்களை பற்றி வந்த மீம்கள் ட்ரோல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்.. பார்வையாளரை மதிக்காமல் நீங்கள் இருக்கிறீர்கள் என்று எழுந்த குற்றசாட்டுக்கு உங்கள் கருத்து?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வம்சி, “நான் பார்வையாளர்களை மதிக்கவில்லை, அவர்கள் பணம் மற்றும் நேரத்தை நான் பொருட்படுத்தவில்லை என்றால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. ரசிகர்கள் இன்னும் எனக்கு பக்கபலமாய் இருக்கிறார்கள்.. எல்லா கலைஞனுக்கும் ரசிகர்களின் பக்கபலம் தேவைப்படுகிறது. என் வேலையை நான் மதித்தாக வேண்டும். நான் அப்படி செய்யவில்லை என்றால் என்னால் முன்னேற முடியாது அதனால் என் வேலையை நான் எந்தளவு மதிக்கிறேனோ அதே அளவு மற்றவரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். என்னை பொறுத்தவரை நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தனிப்பட்ட காழ்பை மற்றவர் மீது பரப்பாதீர்கள்..
உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் படம் பார்ப்பதற்கு முன்பே படத்தை எடை போடுவது படத்தை தரக்குறைவாக பேசுவது தவறு. அதுதான் என் பிரச்சனை. அதனால் தான் கடந்த நேர்காணலில் நான் பேசினேன், ஒரு விஷயத்திற்கு எத்தனை பேர் தங்களது உழைப்பை போடுகிறார்கள். அது எளியவை அல்ல என்று.. நான் சற்று உணர்வு பூர்மாக நடந்து கொண்டேன் நானும் மனிதன் தானே.. ஆனால் நான் அன்று சொன்ன வார்த்தையில் நான் இன்னும் உறுதியாக தான் இருக்கிறேன். இந்த நாட்களில் கருத்துகள் வேறு மாதிரியாக புரிந்து கொள்ளபடுகின்றன. அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது.
மீம்கள், ட்ரோல்களை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறேன். உங்களை பற்றி மீம்களும் ட்ரோல்களும் வந்தவண்ணம் இருந்தால் நீங்கள் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறீர்கள் என்று பொருள். நான் அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டால் எனக்கு வரும் வாழ்த்துக்கள் வரவேற்புகளை என்னால் அனுபவிக்காமல் போய்விடும்.. வாழ்க்கை என்பது நாம் கட்டமைப்பது. நான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கட்டமைத்துள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாரிசு படக்குழுவினர் வாரிசு திரைப்படம் குறித்தும் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து பேசிய முழு வீடியோ இதோ..