தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாகவும் தென்னிந்திய சினிமாவின் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் இந்த ஆண்டு (2022) கோடை வெளியீடாக மக்களை மகிழ்விக்க ரிலீஸாக தயாராகி வருகிறது. இதயைடுத்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ்-ன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்

இதனிடையே கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பலர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இவர்களில் 129 உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றனர். சில மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் நேரில் சந்தித்த தளபதி விஜய் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, "இது பதவி அல்ல பொறுப்பு" என அவர்களது பணியை சிறப்பாக செய்யும்படி வேண்டுகோளும் விடுத்தார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று ஜனவரி 26 வெளியானது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த நகர்புற தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. மேலும் தளபதி விஜய்யின் படம் மற்றும் இயக்கத்தின் கொடிகளை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடைபெறவுள்ள இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை விஜய் மக்கள் இயக்கம் பெருமா என்ற எதிர்பார்ப்பு தற்போது தொடங்கியுள்ளது.