மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் லியோ திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் உடன் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்ய, ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. நினைத்துப் பார்க்க முடியாத கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே காஷ்மீரில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை குழுவினர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். காஷ்மீரில் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் சந்தித்த சோதனைகளை குறிப்பிட்டு சில தினங்களுக்கு முன்பு மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராம்குமார் பாலசுப்ரமணியன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். "நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை முழுவதுமாக உணர்வதற்கே எனக்கு மூன்று நாட்கள் ஆனது... இது அசாத்தியமானது! எங்களின் ஒட்டுமொத்த லியோ பட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு ஒரு சல்யூட்! கடுமையான குளிரும் பனிப்பொழிவும் தான் நாங்கள் தாண்டி வர வேண்டிய முழு முதல் பிரச்சனையாக இருந்தது. நாங்கள் எல்லோரும் பணிக்கு தேவையான உடைகளோடு இருந்த சமயத்தில், நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமான அர்ப்பணிப்போடு தளபதி விஜய் சார், திரிஷா மேடம், சஞ்சய் தத் பாபா, கௌதம் வாசுதேவ் மேனன் சார் , பிரியா ஆனந்த், மிஷ்கின் சார், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், BIGGBOSS ஜனனி ஆகியோர் குளிருக்கான உடை இல்லாமல் மைனஸ் டிகிரி வெப்ப நிலையில் பணியாற்றினர்.
சென்னையில் இருக்கும் எங்களது குடும்பங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு அளவற்ற அன்பை கொடுக்கிறோம். இந்த லியோ திரைப்படத்தை உருவாக்குவதில் முழு வேகத்தோடு பணியாற்றிய எனது கேப்டன் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இருவர் இல்லாமல் இது நடந்திருப்பதற்கான வாய்ப்பே கிடையாது. ஒவ்வொரு முந்தைய நாள் இரவிலும் கலந்துரையாடல்… எங்களது தயாரிப்பாளர் லலித் சார் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ப்ரோ அனைத்திற்கும் நன்றி. திரு.சுபேர் உசேன் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி பஹல்கம் பகுதியை எங்களது என எங்களுக்கு உணர வைத்ததற்கு... நீங்கள் மாஸ் பாய்! மற்றும் ஆமாம் எங்களது இயக்குனர்கள் அணி... நான் ஏற்கனவே சொன்னது போல அனைத்து உணர்வுகளுக்கும் நன்றி எனக்கு நன்றாக தெரியும் நாம் யாருமே இந்த படப்பிடிப்பை நமது வாழ்நாளில் மறக்க போவதில்லை… LOVE YOU BOYS நீங்கள் அனைவரும் இதற்காக அதிகப்படியான கடின உழைப்பையும் முயற்சியையும் கொடுத்துள்ளீர்கள்... லியோ திரைப்படத்தின் மீதான எங்கள் அனைவரது கடின உழைப்பும் அன்பும் தான் எங்களை ஒரு பூகம்பத்தில் இருந்தே காப்பாற்றியது” என தெரிவித்துள்ளார். எனவே லியோ படப்பிடிப்பு தளத்தில் நிகழ இருந்த ஒரு பெரும் அபாயத்திலிருந்து படக்குழுவினர் தப்பித்து கடந்து வந்துள்ளனர் என தெரிகிறது. இன்னும் பிற தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது நிர்வாக தயாரிப்பாளர் ராம்குமார் பாலசுப்பிரமணியனின் அந்த பதிவு இதோ...