கங்குவா: படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் சூர்யா... இயக்குனர் சிவாவின் பிரம்மாண்ட படைப்பின் ஷூட்டிங் நிறுத்தம்!

கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திலிருந்து சூர்யா மீண்டு வருகிறார்,suriya gets injured in kanguva sets director siva halt the shoot | Galatta

இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திலிருந்து நடிகர் சூர்யா தற்போது மீண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முக்கிய காட்சி ஒன்றின் படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் சூர்யாவிற்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து உடனடியாக கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் வருத்தத்திற்கு உள்ளான நிலையில், விரைவாக நடிகர் சூர்யாவின் காயத்திற்கு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் தற்போது காயத்தில் இருந்து சூர்யா மீண்டு வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. வெகு விரைவில் மீண்டும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் தொடங்கும் என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா தொடர்ந்து அதிரடியான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார். அந்த வகையில், தனது திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக தற்போது சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா திரைப்படம் நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட படைப்பாக மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார். மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். 

தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா திரைப் படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என தெரிகிறது. அடுத்ததாக முதல் முறை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் நடிகர் சூர்யா, தொடர்ந்து சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் மற்றொரு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அதுபோக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ரோலக்ஸ் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.