அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்...சாத்தான்குளம் சம்பவம் குறித்து சூர்யா அறிக்கை !
By Aravind Selvam | Galatta | June 28, 2020 10:49 AM IST
கடந்த சில நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வரும் சம்பவம் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் நடந்த தந்தை-மகனின் லாக்கப் மரணம்.அப்பாவி மக்களின் மீது போலீசாரின் இந்த தாக்குதல் குறித்து பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தவண்ணம் உள்ளன.இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து நடிகர் சூர்யா தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.நடிப்பு மட்டுமின்றி எப்போதும் சமூகப்பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் சூர்யா , இந்த முக்கிய பிரச்சனைக்கும் குரல் கொடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
'மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்' என்று கடந்து செல்ல முடியாது.
போலீஸாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், 'இயந்திர கதியில்' சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் 'அதிகார அமைப்புகள்' காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற 'துயர மரணங்கள்' ஒரு வகையான 'திட்டமிடப்பட்ட குற்றமாக' (Organised Crime) நடக்கிறது.
ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், போலீஸாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், 'போலீஸாரை எதிர்த்தால் என்ன நடக்கும்' என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை மகன் இருவரும் இந்தச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கி இருக்கிறார்கள். இந்த கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இதேபோல, 'தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது' என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது 'அதிகார அமைப்புகள்' அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன. இரண்டு அப்பாவிகளின் மரணத்திற்குப் பிறகும், உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கை, சம்பந்தப்பட்ட போலீஸாரை 'ஆயுதபடைக்கு' மாற்றம் செய்வது மட்டுமே. ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது, 'தண்டனை கால பணியாக' பொதுமக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை இது உருவாக்குகிறது.
'இரண்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா?' என்று எழுந்த விமர்சனத்துற்குப் பிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார் 'பணியிடை நீக்கம்' செய்யப்பட்டனர். காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஓட்டு மொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். 'கரோனா யுத்தத்தில்' களத்தில் முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன். அதேநேரம், அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும், மகனையும் இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இனிமேலும் இதுபோன்ற 'அதிகார வன்முறைகள்' காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு 'நீதி நிலைநிறுத்தப்படும்' என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்" என்று சூர்யா தனது அறிக்கையில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
’நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று நம்புவோம். #JusticeForJayarajandBennicks pic.twitter.com/oAgZbZVe9h
— Suriya Sivakumar (@Suriya_offl) June 27, 2020
Vishal's Chakra Official Trailer | Shraddha Srinath | Yuvan Shankar Raja
27/06/2020 05:00 PM
Vanitha Vijayakumar gets hitched to Peter Paul - viral wedding pictures here!
27/06/2020 04:26 PM