ரத்தன் டாடாவின் பயோபிக் படமா..? அடுத்த படம் குறித்து சுதா கொங்கராவின் பதில் இதோ!
By Anand S | Galatta | December 03, 2022 20:07 PM IST
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகர் சூர்யாவின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரும் பாராட்டுகளையும் பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது.
சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர் என & FILMFARE விருதுகளை வென்ற சூரரைப் போற்று திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பு மற்றும் சிறந்த திரைக்கதை என ஐந்து தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா உருவாக்கி வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வரிசையில் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கும் புதிய திரைப்படத்தை கே ஜி எஃப் மற்றும் காந்தாரா படங்களின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS நிறுவனம் தயாரிக்கிறது.
முன்னதாக இந்த திரைப்படம் சூரரைப் போற்று திரைப்படத்தைப் போலவே பயோபிக் திரைப்படம் எனவும் புகழ்மிக்க ரத்தன் டாடா அவர்களின் பயோபிக் திரைப்படத்தை தான், சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில், அதனை தற்போது இயக்குனர் சுதா கொங்கரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ரத்தன் டாடா அவர்களின் மிகப்பெரிய ரசிகன்! அவரது பயோபிக் படத்தை எடுக்கும் எண்ணம் இதுவரை இல்லை… இருந்தாலும் என்னுடைய அடுத்த திரைப்படத்தின் மீது நீங்கள் அனைவரும் காட்டும் ஆர்வத்திற்கு மிக்க நன்றி! விரைவில்…” என சுதா கொங்கரா பதிவிட்டுள்ளார். சுதா கொங்காராவின் அந்த பதிவு இதோ…
I’m a huge admirer of Mr. Ratan Tata. However I have no intention of making his biopic at this moment . But thank you all for your interest in my next film! Soon! 😊
— Sudha Kongara (@Sudha_Kongara) December 3, 2022