இயக்குனர் அமீர் குறித்து இயக்குனர் சுதா கொங்காரா பேசியதாக தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா பகிர்ந்த செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் சுதா கொங்காரா தற்போது முக்கிய பதிவு ஒன்றை தனது X பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். கடந்த சில தினங்களாக இயக்குனர் அமீர் - தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா இடையில் மிகவும் பரபரப்பான காரசாரமான சர்ச்சைகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. நடிகர் கார்த்தியை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் அமீர். பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தின் அடையாளமாக தனது ஒவ்வொரு மேடைகளிலும் "என்ன மாமா சௌக்கியமா?" என்பதை இன்றுவரை கார்த்தி அவர்கள் எல்லா மேடைகளிலும் முதலில் பேசும் வாக்கியமாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த KE.ஞானவேல் ராஜா அவர்கள் பருத்திவீரன் படத்திற்கு முன்பாக இயக்குனர் அமீரின் ராம் படத்தை நடிகர் கார்த்தி, இயக்குனர் சுதா கொங்கரா உடன் அவர் பார்த்ததாகவும் அந்த படம் பார்த்த பிறகு நடிகர் கார்த்திக்கு என்ன முடிவு செய்வது என 50-50 யோசனை இருந்ததாகவும் இயக்குனர் சுதா கொங்காரா அவர்கள் ராம் படத்தை பார்த்து விட்டு படத்தில் “FILM MAKING-ஏ வரவில்லை” என நெகட்டிவாக விமர்சனம் கொடுத்ததாக பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது சுதா கொங்கரா அவர்கள் தனது X பக்கத்தில்,
“பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி…” என தெரிவித்துள்ளார் அந்த பதிவு இதோ…
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து…
— Sudha Kongara (@Sudha_Kongara) November 26, 2023
சமீபத்தில் நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தியின் படங்களின் இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆனால் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து, இயக்குனர் அமீர் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது "என்னை அழைக்கவில்லை" என அவர் பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் இது குறித்து கடந்த சில தினங்களாக ஊடகங்களுக்கு பதிலளித்து வரும் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் முறையாக அழைத்தும் அமீர் அவர்கள் அதை மதிக்கவில்லை என்றும் பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குனர் அமீர் மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என்றும் கடுமையான விமர்சனங்களை அடுக்கி வைத்தார். இவரது இந்த விமர்சனங்கள் அத்தனைக்கும் பதில் அளிக்கும் வகையில் மிக முக்கிய அறிக்கை ஒன்றை இயக்குனர் அமீர் அவர்கள் வெளியிட்டார். மேலும் இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.