தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை கவரும் வகையில் நடனமாடியும் நடன இயக்குனராக பணியாற்றியும் தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருபவர் ஸ்ரீதர் மாஸ்டர். ஆரம்ப கட்டத்தில் நடன கலைஞராக கூட்டத்தில் ஒருவராக நடனமாடி பின்னர் கூட்டத்தின் முன் வரிசையில் மிகச் சிறப்பாக நடனமாடி மக்களின் கவனத்தை ஈர்த்த ஸ்ரீதர் மாஸ்டர், பின் நடன இயக்குனராக உயர்ந்தார். இதுவரை தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு ஃபேவரட்டான நடன இயக்குனராக வலம் வரும் ஸ்ரீதர் மாஸ்டர் காதலில் விழுந்தேன் படத்தின் "நாக்க முக்க" பாடலுக்கு பிறகு இன்னும் பெரிய உயரத்தை அடைந்தார். தொடர்ந்து தளபதி விஜயின் தலைவா படத்தில் "தமிழ் பசங்க", ஜில்லா படத்தில் "எப்ப மாமா ட்ரீட்டு", தெறி படத்தில் "ஜித்து ஜில்லாடி" உள்ளிட்ட பாடல்களில் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன இயக்கம் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது என சொல்லலாம். நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் அவர்களின் மகள் அக்ஷதா ஸ்ரீதர் தற்போது மருத்துவம் பயின்று வருகிறார்.
மேலும் நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அக்ஷதா தனது இன்ஸ்டாகிராம் ரிலீஸ்களில் தனது நடன திறமையை உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அக்ஷதாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். சோசியல் மீடியாவின் வாயிலாக தற்போது செலிபிரிட்டியாக உயர்ந்திருக்கும் அக்ஷதா நமது கலாட்டா சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்தார்.
இந்த சிறப்பு பேட்டியின் போது சர்ப்ரைஸாக நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரும் கலந்து கொண்டு பேசினார். அந்த வகையில் பேசும் போது, "தற்போது நீங்கள் மருத்துவம் பயின்று வருகிறீர்கள் விரைவில் நீங்கள் சினிமாவிலும் நடன இயக்குனராகவோ நடிகையாகவோ களமிறங்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும்போது சினிமாவில் வருவதற்கு ஏன் மருத்துவம் படிக்க வேண்டும்? இதனால் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஒருவருக்கு கிடைக்க வேண்டிய இடம் பறிப்போகிறது அல்லவா? என சமூக வலைத்தளங்களில் எழும் கேள்விகள் குறித்து அக்ஷதாவிடம் கேட்ட போது, "நான் மருத்துவம் படிக்கிறேன் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை! இது என்னுடைய இஷ்டம். நீங்கள் கேட்கிறீர்களா அல்லவா எதற்காக மருத்துவம் படிக்க வேண்டும் என... சின்ன வயதிலிருந்து அது என்னுடைய ஆசை, என்னுடைய கனவு. அம்மா சொல்வார்கள் நீ ஒரு மருத்துவராக வேண்டும் என, இது என்னுடைய கனவு. என்னிடம் இதை நிறைய பேர் சவால் விட்டிருந்தார்கள். "சும்மா நீ எல்லாம் நீட் எல்லாம் படித்துவிட்டு உள்ளே போய் விட முடியாது" என, என்னுடைய ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சமயங்களில் நான் சராசரி மாணவி தான். "நீ அப்பாவோடு டான்ஸ் தான் போகப் போகிறாய் அதற்கு எதுக்கு படித்துக் கொண்டு நீ டான்ஸ் செய்து கொள்ளலாம்" என்றெல்லாம் பேசினார்கள். இப்படியான விஷயங்கள் எல்லாம் சின்ன சின்னதாக ஸ்ட்ரைக் ஆகிக் கொண்டே இருந்தது." என பதில் அளித்துள்ளார். நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் அவரது மகள் அக்ஷதாவின் அந்த முழு பேட்டி இதோ…