ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் மீது திருப்பி இருக்கிறார் நடிகர் சூரி. இத்தனை நாட்களாக நகைச்சுவை நடிகராக அசத்தி வந்த நடிகர் சூரி தற்போது முற்றிலும் மாறுபட்டு தேர்ந்த நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் இந்த விடுதலை திரைப்படத்தில் குமரேசன் எனும் காவலர் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க, பெருமாள் வாத்தியார் எனும் மிக முக்கிய வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதுவரை கண்டிராத பிரமிப்பூட்டும் திரை அனுபவத்தை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை விடுதலை திரைப்படத்தின் மூலம் ஏற்படுத்தி இருக்கிறார். தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த மார்ச் 31ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள விடுதலை பாகம் 1 திரைப்படத்தை தொடர்ந்து 2ம் பாகம் அடுத்த நான்கு - ஐந்து மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடந்த சூரி ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி தனது ஆரம்பகால திரைப்பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தான் முதன் முதலில் வசனம் பேசி நடித்த திரைப்படமான இயக்குனர் சுந்தர்.C-ன் கண்ணன் வருவான் படம் பற்றி பேசினார்.
“கண்ணன் வருவான்... வாழ்க்கையில் சினிமாவில் முதல் முறை நான் வசனம் பேசிய திரைப்படம்... சுந்தர்.C அண்ணன் இயக்கத்தில் கார்த்தி சார் கதாநாயகனாகவும் திவ்யா உன்னி கதாநாயகியாகவும் நடிக்க, கவுண்டமணி சாரின் காம்பினேஷனில் நான் முதலில் வசனம் பேசி நடித்த படம். பட்டாபட்டி டவுசர் போட்டு கொண்டு கவுண்டமணி சாரிடம், “தெய்வமே தெய்வமே கும்பிட போன தெய்வமே என் குறுக்க வந்த தெய்வமே என் தெய்வமே என் தெய்வமே” என சொல்வது தான் என்னுடைய முதல் வசனம்” என தெரிவித்த நடிகர் சூரி அவர்களிடம், நடிகர் கவுண்டமணி அவர்களுடன் அந்த தருணத்தில் பேசிய, இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, “இந்த வசனத்தை பேசுவதற்கு வேறு ஒரு நடிகரை முடிவு செய்து வைத்திருந்தார்கள். நம்முடைய நடிகரும் பெரிய இயக்குனருமான சிங்கம் புலி அண்ணன் இருக்கிறார் அல்லவா? அவர்தான் இந்த படத்திற்கு வசனகர்த்தா... அப்போது அண்ணன் எனக்கு கொடுத்துவிட்டார். அவரிடம் கவுண்டமணி சார் கேட்டார், "டேய் புலி ஏற்கனவே ஒருவன் உட்கார்ந்திருக்கிறான் அவனுக்கு கொடு" என கேட்டார். அதற்கு, “இல்லை அண்ணே ஏற்கனவே செட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். சின்ன டயலாக் தானே பண்ணிட்டு போறான்” என சொன்னார். அதற்கு கவுண்டமணி சார், “இவர்கள் எல்லாம் பண்ண மாட்டார்களடா பாவம்... அவர்கள் கம்பெனி நடிகர்கள்... அவர்கள் கம்பெனி கம்பெனியாக அலைகிறார்கள்” என அவரும் ஒருவருக்காக தான் பேசுகிறார். சிங்கம்புலி அண்ணனும், “இவனும் இதற்காக தான் வேலைக்கு வந்து இருக்கிறான் கம்பெனி கம்பெனியாக அலைகிறான் இவனுக்கு கொடுப்போமே” என எனக்கு கொடுத்தார். எப்படியோ வாய்ப்பை பெற்று எனக்கு கொடுத்தார். அதில் நடிப்பதற்குள் படாத பாடுபட்டேன். ஒவ்வொருமுறை டயலாக் பேசும் போதும் கேமரா வந்து போகும்போதெல்லாம் கவுண்டமணி சாரை மறைத்து விடுவேன். அப்போது கவுண்டமணி சார் டென்ஷன் ஆகிவிட்டார். “சரியாக வராத ஒரு நடிகரை பாவம் ஏன் இப்படி செய்கிறீர்கள்” என கோபப்பட்டார் ஒரு வழியாக கடைசியில் நடித்து முடித்துவிட்டேன். அதன் பிறகு அரண்மனை 2 திரைப்படத்தில் அதே இயக்குனருடன் பெரிய படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்த போது அதுதான் மிகப்பெரிய சந்தோஷம்" என சூரி பதிலளித்துள்ளார் சூரியின் அந்த முழு பேட்டி இதோ…