தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிலம்பரசன் மீண்டும் திரையுலகில் தான் ஒரு முன்னணி கதாநாயகன் என நிரூபிக்கும் விதமாக கம்பேக் கொடுத்த திரைப்படம் மாநாடு. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று மெகா ஹிட் ஆனது.

பல தடைகளையும் தாண்டி ரசிகர்களை வந்து சேர்ந்த மாநாடு திரைப்படத்தை V ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்தார். மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் S.J.சூர்யா மிரட்ட, மறுபுறம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்தொகுப்பாளர் பிரவீன்.KL-ன் படத்தொகுப்பும் மாநாடு படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.

தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு திரைப்படம் தற்போது 50 நாட்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநாடு படத்தின் 50வது நாளை முன்னிட்டு படக்குழுவினர் ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நன்றி… அனைவருக்கும் நன்றி”  என பதிவிட்டுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு, “அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா காதலர்கள் மற்றும் சிலம்பரசனின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள்,

"தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும்". #மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும் அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. 50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணையானது. இடையில் புதுப்படங்கள் வந்து போனாலும் #மாநாடு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டான்.. வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல. வெற்றி தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் என்பதாக இந்த
வெற்றி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன் TR, இயக்குநர் வெங்கட் பிரபு, ஃபைனான்சியர் திரு. உத்தம் சந்த் அவர்களுக்கும்... அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், வாங்கிய விநியோகஸ்தர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பண்பலை நண்பர்கள் மற்ற மொழியிலும் இப்படத்தைக் கொண்டு சேர்த்த பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும், என் தாய் தந்தைக்கும் இவ்வெற்றியை சமர்ப்பித்து மகிழ்கிறேன்.
நன்றி நன்றி நன்றி!
-சுரேஷ் காமாட்சி
இயக்குநர் | தயாரிப்பாளர்.

என பதிவிட்டுள்ளார்.