நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் புதிய படம் குறித்த ருசிகர தகவல் !
By Sakthi Priyan | Galatta | November 24, 2020 18:34 PM IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். புஷ்கர் - காயத்ரி இயக்கிய பிளாக்பஸ்டர் படமான விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதில் இடம்பெற்ற யாஞ்சி பாடல் ஹிட்டாக, தமிழ் ரசிகர்களின் மனதில் நெஞ்சாத்தியாக இடம் பிடித்து விட்டார் ஷ்ரத்தா.
கடந்த ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான பாத்திரத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அருள் நிதி நடித்த கே13 மற்றும் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்-கல்லாக அமைந்தது.
இந்நிலையில் தனது புதிய படம் குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஷ்ரத்தா. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு என்கிற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஷ்ரத்தா. இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் இப்படம் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது.
இப்படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்ட நடிகை ஷ்ரத்தா, படக்குழுவினர் பற்றியும், மோகன்லால் குறித்தும் பதிவு செய்தார். மோகன்லால் வெல்கம் டு மை ஃபேமிலி என்று கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்த இந்த படம் டிசம்பர் 17-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.
Joined the sets of 'Aaraattu' today. Met the whole team. @Mohanlal sir's first words to me were, "Welcome to the family". My day = made.
— Shraddha Srinath (@ShraddhaSrinath) November 24, 2020