தனக்கென தனி பாணியில் செம ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் (தெலுங்கில் வாரசுடு) தயாராகி வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் பேசிய வாரிசு படத்தின் நடன இயக்குனர் ஷோபி மாஸ்டரிடம், “இயக்குனர் வம்சி ஒரு தெலுங்கு இயக்குனர் அவர் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெய்னர் படங்களை கொடுத்துள்ளார். மகேஷ் பாபுவின் படம் கூட நன்றாக இருந்தது. அத்திரைப்படத்தை நாம் தமிழ் டப்பிங்கில் செய்து பார்த்தோம்... அதேபோல் வாரிசு திரைப்படம் ஃபேமிலி சென்டிமென்ட் திரைப்படமாக எடுத்து வரும்போது அது நமது தமிழ் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகுமா?” எனக் கேட்டபோது,
“அது என்னவென்றால்… நமது இயக்குனர்கள் எத்தனை பேர் மற்ற மொழிகளில் படம் இயக்குகிறார்கள். ஹிந்தி படம் இயக்கி இருக்கிறார்கள். ஏன் பாக்கியராஜ் சார் எத்தனை ஹிந்தி படங்கள் இயக்கியிருக்கிறார். நம்ம முருகதாஸ் சார் ஹிந்தி படங்கள் இயக்குகிறார். இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் நான் நிறைய தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அப்படி நிறைய தெலுங்கு படங்கள் பண்ணும் போது அதை நாம் உள்வாங்கி செய்கிறோம். மனித உணர்வுகள் எல்லாமே ஒன்றுதானே! நாம் அங்கிருக்கும் நடிகர்கள் எல்லாம் தெலுங்கு நடிகர்கள், அவர்களுடைய உடை, அதை எல்லாம் பார்த்து நமக்கு அப்படி தோன்றலாம். ஆனால் அதே இடத்தில் நம்ம ஆட்களை வைத்து பாருங்கள் நமக்கு அப்படி ஒரு உணர்வு வராது. அங்கே நடிக்கும் ஒரு நகைச்சுவை நடிகர் அவர்களுக்கான ஒரு உடல் மொழியில் நடிப்பார். இங்கே வாரிசு படத்தில் நமது யோகி பாபு நடித்திருக்கிறார். அவர் அவருக்குரிய நடிப்பை வெளிப்படுத்தும்போது நிச்சயமாக அந்த தெலுங்கு FLAVOR வராது. அப்படி இருக்க வாய்ப்பே கிடையாது என நான் நம்புகிறேன். மனித உணர்வுகள் எல்லாமே ஒன்றுதானே குடும்ப பிரச்சினைகள் எல்லாமே ஒன்றுதானே! நமது திரைப்படங்கள் எத்தனை படங்கள் அங்கே ஓடி இருக்கின்றன. டைட்டானிக் படத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் நாம் கனெக்ட் ஆகிவிட்டோமல்லவா..! அதுபோல தான்” என பதிலளித்துள்ளார். நடன இயக்குனர் ஷோபி மாஸ்டரின் அட்டகாசமான இந்த முழு பேட்டி இதோ…