பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்!
By Anand S | Galatta | November 29, 2021 10:51 AM IST
தமிழ் திரையுலகின் மூத்த முன்னணி நடன இயக்குனராக வலம் வந்த சிவசங்கர் மாஸ்டர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளதோடு நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குருவிக்கூடு திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான சிவசங்கர் மாஸ்டர் பாரதிராஜாவின் மண்வாசனை, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி, பாலுமகேந்திராவின் மறுபடியும்,தளபதி விஜய்யின் பூவே உனக்காக,தல அஜித்தின் வரலாறு, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.
குறிப்பாக நடிகர் தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடலில் சிவசங்கர் மாஸ்டரின் பணியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. மேலும் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த மகதீரா படத்திற்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதும் சிவசங்கர் மாஸ்டருக்கு கிடைத்தது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிவசங்கர் மாஸ்டர், அவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிவசங்கர் மாஸ்டரின் மருத்துவ செலவுக்கும் போதிய பணவசதி இல்லாமல் குடும்பத்தினர் அவதிப்பட்ட நிலையில் பல முன்னணி பிரபலங்களும் உதவ முன்வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் உயிரிழந்தார். அவருக்கு வயது 72. மறைந்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டருக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Choreographer #Shivashankar master passed away around 8.00PM now. #RIPShivaShankarMaster pic.twitter.com/5aPFGqdjIS
— nadigarsangam pr news (@siaaprnews) November 28, 2021