தமிழ், தெலுங்கு திரையுலகில் பல ஹிட் திரைப்படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. முன்னதாக இவரது நடிப்பில் இந்தியில் வெளியான ‘பேமிலி மேன் 2’ இணைய தொடரில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் தற்போது இந்தியிலும் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியடைந்ததையடுத்து சமந்தா முழுமையான வெற்றிக்கு அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து வருகிறார்.
அதன்படி அவர் தெலுங்கில் இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் ‘குஷி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் மாத வெளியீடாக ரிலீசாகவுள்ள நிலையில், படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி கவனம் ஈர்த்துள்ளது. இவர்கள் முன்னதாகவே மகாநடி படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த ஜோடி மீண்டும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாகும் ‘சென்னை ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே சமந்தா தற்போது பேமிலி மேன் தொடர் இயக்குனர்களான ராஜ் மற்று டிகே இயக்கத்தில் சிடாடேல் என்ற இந்தி இணைய தொடரில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சிட்டாடல் ஆங்கில தொடரில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை உலகளவில் பெற்றது. அந்த தொடரின் இந்திய வெர்ஷனில் தற்போது சமந்தாவும் வருண் தவானும் நடித்து வருகின்றனர். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஸ்பை திரில்லர் தொடராக உருவாகும் சிட்டாடல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகி சமந்தா அவரது பங்கை நடித்து முடித்து முடித்துள்ளார். இது குறித்து பட இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன்,
“கடினமான நேரங்களில் அதை எதிர்கொள்ள உதவியதற்கும், என்னை ஒருபோதும் கைவிடாததற்கும் நன்றி. உலகில் உள்ள எதையும் விட நான் உங்களை பெருமைப்படுத்த விரும்புகிறேன்.. வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. அதாவது நீங்கள் எனக்கு அடுத்த கதை எழுதும் வரை..” என்று இயக்குனர் ராஜ் மற்றும் டிகே குறித்து குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா..
இதையடுத்து சமந்தாவின் பதிவு இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்துகளுடன் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவிற்கு ஏற்பட்டுள்ள அறிய வகை நோய்க்கான சிகிச்சைக்காக அடுத்த 6 மாதம் செலவிடவுள்ளதால். குஷி, சிட்டாடல் படத்தையடுத்து சமந்தா வேறு படங்களில் ஒப்பந்தமாகவில்லை. அடுத்த ஒரு ஆண்டு கழித்தே திரைப்படங்களில் நடிக்க வருவார்கள் என திரைவட்டாரங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.