மக்களை மகிழ்விக்கும் ரேடியோ ஜாக்கியாக புகழ்பெற்ற RJ.பாலாஜி தற்போது தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து தரமான படைப்புகளில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் RJ.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார்.
விரைவில் திரைக்கு வர தயாராகி வரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே RJ.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய RJ.பாலாஜி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில்,”RJவாக இருந்தபோது ஒரு சம்பளம் வாங்கி இருப்பீர்கள்.. அப்போது அதற்கான ஒரு செலவுகள் இருந்திருக்கும். இப்போது வாங்கும் சம்பளத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது அதிலும் அதற்கு தகுந்த செலவுகள் இருக்கின்றதா? எனக் கேட்டபோது,
“நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இப்போது வாங்கும் சம்பளமோ அல்லது போன வருஷம் அல்லது கடந்த சில ஆண்டுகளாக நான் வாங்கக்கூடிய சம்பளம் என நீங்கள் சொல்வதும் என் வேலை மூலமாக நான் சம்பாதிப்பதும் ஒரு ஆசீர்வாதமாக தான் நான் பார்க்கிறேன். அது எனக்கு போனஸ் தான். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை, எனக்கு சாதாரணமாக நான் அலுவலகத்திற்கு செல்வேன். நன்றாக வேலை செய்வேன், வேலைக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்களா நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன். நீங்கள் சொன்ன மாதிரி ஆரம்பத்தில் யாருக்கு கஷ்டம் இல்லை, எல்லோருமே கடன் வாங்கி இருக்கிறோம். எல்லோருமே வீட்டிற்காக நிறைய பிரச்சனைகளை தீர்த்து வைத்திருப்போம், அதெல்லாம் நானும் செய்திருக்கிறேன். அதை எல்லாம் தாண்டி என் குடும்பத்திற்கு நான் என்ன எல்லாம் அடிப்படையாக செய்ய வேண்டும் என நினைத்தேனோ அதெல்லாம் செய்ய முடிந்ததற்கு பிறகு நான் இப்போது என்ன பெறுகிறேனோ அது எல்லாம் என்னுடைய போனஸ். அதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இல்லை ஏதாவது குறை இருக்கிறதா? எனக் கேட்டால் அதற்கு நான் இல்லை, என பதில் சொன்னால் அது மிகவும் மோசமானது. அது உண்மையே கிடையாது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை தாண்டி இது ஒரு ஆசிர்வாதமாக நினைக்கிறேன். ஒரு சாதாரண மனிதர் நம் வீட்டில் இருக்கும் ஒரு அம்மா அக்கா போன்று உடல்வாகு கொண்ட ஒரு மனிதர் காலையில் மூன்று வீடு மாலையில் இரண்டு வீடு மொத்தமாக ஐந்து வீட்டிற்கு முழுவதும் சுத்தம் செய்து பாத்திரங்கள் கழுவி துணி துவைத்து மொட்டை மாடியில் காய வைத்து எல்லாம் செய்வதற்கு ஒரு வீட்டிற்கு 4000-5000 ரூபாய் அவர்களுக்கு சம்பளமாக கொடுப்பார்களா? அவ்வளவு வேலை செய்யும் அந்த அக்காவே எப்போது பார்த்தாலும் ரொம்ப சந்தோஷமாக வேலையைப் பற்றி யோசிக்காமல் செய்கிறார்கள். அந்த வேலையில் உடல் வலி ஜாஸ்தியா? அல்லது சினிமாவில் உடம்பு வலி ஜாஸ்தியா? ஒரு முறை நானும் சத்யராஜ் சாரும் வீட்ல விசேஷம் படத்தின் போது கோயமுத்தூரில் காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில், வெளியில் ஒரு நபர் கிட்டத்தட்ட சத்யராஜ் அவர்களின் வயதை ஒத்த ஒரு நபர் நடந்து செல்வதை பார்த்தோம். அப்போது சத்யராஜ் சாரிடம், “என்ன சார்” என்று கேட்டேன். “இல்லை இப்போது நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்” என்று அவர் என்னிடம் கேட்டார். “நான் தெரியவில்லை என்ன சார் கேட்கிறீர்கள்” என சொன்னேன். “எதுவுமே இல்லை நானும் அவரும் ஒரே மாதிரி தான். இப்போது நான் இப்படி இருக்கிறேன். நான் இப்போது காரில் போய்க்கொண்டிருக்கிறேன். இறங்கினால் என்னை இத்தனை பேருக்கு தெரியும். இது எல்லாமே இந்த வேலை எனக்கு கொடுத்தது. இந்த சினிமா கொடுத்தது தான்! இதில் நான் எப்படி ஐயோ இதில் இவ்வளவு கஷ்டம் ஐயோ இதில் இவ்வளவு பிரச்சனை என நான் எப்படி சொல்ல முடியும்” என சொன்னார். நானும் அதை தான் நினைப்பேன் இதெல்லாம் எனக்கு எடுக்க ஆசீர்வாதமாக நினைக்கிறேன். இதற்கு இந்த உழைப்பு கூட கொடுக்கவில்லை என்றால் அது சரியாக இருக்காது. இதில் குறை சொல்கிறோம் புலம்புகிறோம் என்றால் அது சரியே கிடையாது.” என பதிலளித்துள்ளார். RJ.பாலாஜியின் அந்த முழு பேட்டி இதோ