ஒட்டு மொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம். இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகவும் கொண்டு வெளிவந்த ஜெய்பீம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

உண்மை சம்பவத்தில் வாழ்ந்த நிஜ கதாபாத்திரங்களை அப்படியே கண்முன் நிறுத்தும்படி ஜெய் பீம் திரைப்படத்தில் தங்களது சிறந்த நடிப்பால் நடிகர்கள் சூர்யா, லிஜோமொள் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் ரசிகர்களின் மனதைத் தொட்டனர். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பலரும் நெகிழ்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் சூர்யா, இருளர் பழங்குடி இன மக்களின் கல்வி நலனுக்காக தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், நிஜமான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு பேருதவி செய்ய முன்வந்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது.பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அன்புடன் 
ராகவா லாரன்ஸ் 

என தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தர முன்வந்துள்ள நடிகர் லாரன்ஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.