விஜய் ஸ்ரீ ஜி-யின் பவுடர் படத்தில் அறிமுகமாகும் நிகில் முருகன் !
By Sakthi Priyan | Galatta | November 07, 2020 10:14 AM IST
இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி-யின் முதல் படமான தாதா 87-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக உருவாகி வரும் திரைப்படம் பவுடர். இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார் பிஆர்ஓ நிகில் முருகன். நிகில் முருகனின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது:
நிகில் முருகனை திரையுலகம் 25 ஆண்டு காலமாக சிறந்த பிஆர்ஓவாக அறியும். முன்னணி சினிமா பிஆர்ஓ.,வுக்கே உரித்தான பாணியில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் அவரை, லாக்டவுன் நேரத்தில் நான் பயன்படுத்திக் கொண்டேன்.
முதலில், இந்த ஸ்க்ரிப்ட்டுடன் நான் அவரை அணுகியபோது, எனக்கு நடிப்பதில் விருப்பமே ஆனால் பிஆர்ஓ., ஆகவே காலூன்றி பணி புரிந்து வருகிறேனே என்று தயங்கினார். அதன்பின்னர் சில சுற்று பேச்சுவார்த்தைகளில் உடன்பட்டு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் சம்மதித்ததில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எனது முதல் படத்தில் சாருஹாசன் சாரை ஒரு டானாக அறிமுகப்படுத்தினேன். அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், எனது பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தாவை முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன்.
10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஜனகராஜை மக்கள் மத்தியில் தாதா -87 படம் மூலம் மீண்டும் கொண்டு சேர்த்தேன். சினிமாவில் பொதுவாக இந்த ஆர்டிஸ்ட் இந்த கேரக்டர் தான் என்று பொருத்தி வைத்திருப்பார்கள். அந்த வரையறைகளை உடைத்து வெற்றி காண்பதே எனது பாணி மற்றும் இலக்கு. அதன்படி, தாதா 87-ல் நடிகர் சாருஹாசனை நான் ஒரு டானாக காண்பித்தபோது ரசிகர்கள் அதை ஏற்று மகிழ்ந்தனர். அந்த வரிசையில் இப்போது, திரையுலகினரால் பிஆர்ஓ-வாக மட்டுமே அறியப்பட்ட நிகில் முருகனை மக்கள் முன்னால் நடிகராக களமிறக்கிவுள்ளேன். இதில், நிச்சயம் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கையிருக்கிறது.
நிகில் முருகனின் கதாபாத்திரத்தின் பெயர் ராகவன். வேட்டையாடு விளையாடு படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் சூட்டிக்கொண்டதால் வலிமை பெற்ற அந்தப் பெயரை பவுடர் படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன். ராகவன் கேரக்டரில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பையர் ஆனதால் அதே பெயரை இந்தக் கதாபாத்திரத்துக்குக் கொடுத்துள்ளேன். படத்தில் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்த நாள் முதலே நிகில் முருகன் நடிப்புப் பயிற்சி, உடற்பயிற்சி என தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். உடலை கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் வலிமையாக்கி திரையில் சிறப்பாகப் பொருந்தியுள்ளார். அவரது குரல் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு ப்ளஸ் என்றே சொல்வேன்.
நிகில் முருகன் பங்குபெறும் காட்சிகள் பெரும்பாலனவை, தீவிர லாக்டவுனுக்குப் பின்னர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியபோதே முடித்துவிட்டோம். நாயகி வித்யா பிரதீப்புடனான காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டும். வாய்ப்புகள் நம்மைத் தேடிவரும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சான்றோர் சொல்வார்கள். நிகில் முருகன் அதை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன் என்று கூறினார்.
மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பவுடர் படத்திற்கு ராஜா பாண்டி RP ஒளிப்பதிவு செய்கிறார். லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ளது. 2021-ம் ஆண்டு பவுடர் படம் திரைக்கு வரவுள்ளது. சிறந்த பிஆர்ஓ-வாக இருந்து நடிகராக அறிமுகமாகும் நிகில் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.
Yen Peyar Anandhan official Trailer | Santhosh Prathap | Athulya Ravi
07/11/2020 09:00 AM
Ahmed Meeran makes it to the list of 400 most influential people of Asia in 2020
06/11/2020 07:00 PM