சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முக்கிய கதாநாயகியாக ஜொலித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்ததாக, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்தவரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுபோக டிமான்டி காலனி 2, அரண்மனை 4, ஜீப்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் பிரியா பவானி சங்கரின் கைவசம் இருக்கின்றன. இதனிடையே மான்ஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா அவர்களுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பொம்மை திரைப்படம் நாளை மறுநாள் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் வரும் கொச்சையான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “நமக்கு முக்கால்வாசி பிரஷர் வெளியில் இருந்து வருவது தான். மேலும் மக்கள் உங்களை பின் தொடர்கிறார்கள் அவர்கள் சினிமா நட்சத்திரங்கள் பண்ணும் விஷயங்களால் உற்சாகமடைகிறார்கள். அதனால் பல கட்டங்களுக்கு பிறகு அந்த திரை மறைந்து விடுகிறது. அது அவர்களுடைய வாழ்க்கை அதற்குள் போகக்கூடாது என இல்லாமல் போய் விடுகிறது. எல்லோருமே நடிகர்களின் வாழ்க்கையில் முதலீடு செய்கிறார்கள். அதனால் அதையெல்லாம் கொஞ்சம் தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்வது நல்லது. எல்லோருக்கும் பதில் சொல்ல முடியாது எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது" என பதில் அளித்தார்.
தொடர்ந்து, “ஆனால் நீங்கள் பதில் செல்கிறீர்களே சில நேரங்களில்..?” எனக் கேட்டபோது, “ஆமாம் அதற்காக நான் வருந்துகிறேன்.. அதை நினைத்து பெருமைப்பட முடியவில்லை. சில நேரங்களில் சில பதில்கள் சொல்ல வேண்டியதாயிருக்கின்றன. நீங்கள்தான் உங்களுக்காக நிற்க வேண்டும் என இருக்கிறது. வேறு யாரும் நமக்காக முட்டு கொடுக்க மாட்டார்கள். ஆனால் இதில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்க போவதில்லை. "ஓ! நமக்கு பதில் சொல்லிவிட்டார்கள் இனிமேல் நாம் இப்படி இருக்க கூடாது இனிமேல் நாம் திருந்து விட வேண்டும் இனிமேல் நாம் பேசக்கூடாது" என மாறப்போவதில்லை. நாலு பேருடைய கவனத்தை பெறுவதற்காக இன்னும் லைட் போட்டு அந்த பிரச்சனையை நாமே பெரிதாக்குவது போல் இருக்கிறது என்பது அந்த கமெண்ட்களுக்கு பதில் அளித்த உடனே தெரிந்து விடுகிறது. அதற்காக இனி இதை பண்ண மாட்டேன் என்றெல்லாம் இல்லை, அந்த பதிலை போட்டவுடன் வருந்துகிறேன் இதை தவிர்த்து இருக்கலாம் என்று… ஏனென்றால் அதிகமான ட்ரோல்கள் ஃபன் என்ற கட்டத்தில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் மிகவும் மோசமாக கமெண்ட் செய்பவர்களுக்கு முகம் இல்லை. அவர்கள் உங்களை நேரில் பார்த்தார்கள் என்றால் அது மாதிரியான கொடூரமான விஷயங்களை உங்கள் முகத்திற்கு நேராக சொல்ல மாட்டார்கள். முகம் தெரியாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அவர்கள் இழப்பதற்கு எதுவும் கிடையாது. ஒரு Youtube வீடியோ கமெண்ட்களில் மிகவும் கொச்சையாக பேசுபவர்களுக்கு முகங்கள் கிடையாது. எனவே இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல ஆரம்பித்தோம் என்றால் அதற்கு ஒரு முடிவே கிடையாது. அதைப் பார்க்காமல் விடுவது நம்முடைய முடிவு தான் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.” என தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை பிரியா பவானி சங்கரின் ஸ்பெஷல் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.