குணச்சித்திர நடிகராகவும் துணை நடிகராகவும் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்த நடிகர் ஹரீஷ் பெங்கன் கல்லீரல் பாதிப்பு காரணமாக காலமானார். கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் குட்டி நடுவில் இயக்கத்தில் வெளிவந்த நோட் அவுட் படத்திலிருந்து தனது திரை பயணத்தை தொடங்கிய நடிகர் ஹரிஷ் பெங்கன் 2016 ஆம் ஆண்டு நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்த ஷெஃபிகின்டே சந்தோஷம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த ஹரிஷ் பெங்கன் அடுத்தடுத்து ஹனி பீ 2.5, ஜான் ஈ மான் மற்றும் வெள்ளாரி பட்டணம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மின்னல் முரளி, தற்போது தளபதி விஜயின் லியோ படத்தில் நடித்து வரும் மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் நடித்த ஜோ அண்ட் ஜோ, டாடா பட நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் நடித்த பிரியன் ஒட்டத்திலானு மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்திலும் ஹரிஷ் பெங்கன் துணை நடிகராக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சமீபத்தில் ஊர்வசி நடிப்பில் வெளிவந்த மலையாள படமான சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைப்படத்தில் நடிகர்கள் கலையரசன் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோரோடு இணைந்து நடிகர் ஹரீஷ் வெங்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முன்னதாக வயிற்று வலி காரணமாக கடந்த மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஹரிஷ் பெங்கனுக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை எடுத்து அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் நடிகர் ஹரீஷ் பெங்கனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ செலவுக்காக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களால் முடிந்தவரை நிதி திரட்டி வந்தனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் அவரது சிகிச்சைக்கு தன்னால் இயன்ற பண உதவி செய்ததோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரிஷ் பெங்கன் அவர்களின் வங்கி கணக்கை பகிர்ந்து, அவரது "உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் முடிந்தவரை எல்லோரும் உதவ முன் வர வேண்டும்" என்றும் குறிப்பிட்டு உதவிக்கரம் நீட்டினார்.
நடிகர் ஹரீஷ் பெங்கனின் உடன் பிறந்த சகோதரி ஸ்ரீஜா அவரது கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார். இருப்பினும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் தேவைப்பட்டதால் அதற்காக அவரது குடும்பத்தினர் போராடி வந்த நிலையில் பணம் முழுவதும் சேர்வதற்கு முன்பு நடிகர் ஹரிஷ் பெங்கனின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து நேற்று மே 30ஆம் தேதி மதியம் 3:14 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 48. பிரபல நடிகர் ஹரிஷ் பெங்கனின் திடீர் மரணம் மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கலாட்டா குழுமம் நடிகர் ஹரீஷ் பெங்கனனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மலையாள திரை உலகை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.