ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியான கதாநாயகிகளின் திரைப்படம் : வரவேற்ற ரசிகர்கள்
By | Galatta | January 03, 2023 19:54 PM IST
தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததெல்லாம் பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா காலகட்டத்தில் முடிந்து விட்டது என்ற விமர்சனம் இருந்தாலும் பெண்கள் சார்ந்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமீப காலமாக அதிக படங்கள் வர தொடங்கிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் சார்ந்து கதாநாயகன் பேசியும் அல்லது கதாநாயகி பேசியும் திரைப்படங்களை மக்கள் பெருவாரியாக வரவேற்று வருகின்றனர். அதனாலே தயாரிப்பாளர்கள் இதுபோன்ற படங்களை தயாரிக்க முன்வருகின்றனர்.
இந்த சூழல் ஆரோக்கியமான படைப்புகளை உருவாக்குகிறது. படைப்பாளர்களுக்கு பரந்த கற்பனை ஓட்டத்திற்கு இணக்கமாக உள்ளது என்றும் திரையில் பெண்களுக்கும் சமபங்கு என்ற நிலை வருவதையும் பரவலாக மக்கள் வரவேற்று வருகின்றனர். மேலும் நல்ல கதை சார்ந்து நடிக்க முன்னணி கதாநாயகிகள் முன்வருவதால் அந்த படம் குறித்தும் படைப்பாளர்கள் குறித்தும் கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்த சுமூகமான திரை சூழலை தமிழ் சினிமா தாமதாமாக மீட்டெடுத்தாலும் மற்ற மொழி படங்களுக்கும் முன்னுதாரணமாக பல படங்களை கொடுத்து வருகிறது. அதன்படி வருடத்தில் ஐந்து அல்லது ஆறு படங்கள் ரிலீஸ் ஆவது சகஜம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதி வாரத்தில் கதாநாயகியை மையப்படுத்தி 4 படங்கள் வெளியாகியது.
இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'மாயா' புகழ் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'கனெக்ட்' திகில் திரைப்படமும், திரிஷாவின் நடிப்பில் 'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குனர் எம் சரவணன் இயக்கத்தில் 'ராங்கி' திரைப்படமும் வெளியானது மற்றும் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடிப்பில் வெளியான படம் 'செம்பி' திரைப்படமும் கின்சிலின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'டிரைவர் ஜமுனா' திரைப்படமும் வெளியாகியது.
இந்த திரைப்படங்களின் விளம்பர பேனர்களை ஒரே வரிசையில் வைத்து திரையரங்கை அலங்கரித்துள்ளது வெற்றி திரையரங்கம். இந்த செயல் பலதரப்பினரிடமிருந்து பாராட்டுக்களை பெற்று வருவதோடு வலைத்தளத்திலும் அந்த புகைப்படம் வைரலாகி கவனம் பெற்று வருகிறது.