இறைவனடி சேர்ந்தார் இயக்குனர் மகேந்திரன் !
By Sakthi Priyan | Galatta | April 02, 2019 09:14 AM IST
இயக்குனர் மகேந்திரன் - தமிழ் சினிமா கண்டெடுத்த காவிய தலைவன். இவரது படைப்புகள் வெறும் படங்களாக இல்லாமல் பாடங்களாக இருந்து வருகிறது. வசனகர்த்தாவாக தனது ஆரம்ப கால வாழ்க்கையை துவங்கிய மகேந்திரன், முள்ளும் மலரும் படம் மூலம் திரையில் பிரகாசித்தார். தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் அசத்தலான வரவேற்பைப் பெற்றன.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய மகேந்திரன் இயக்கிய படத்தில் அறிமுகமான நடிகர், நடிகைகள் ஏராளம். இயக்கத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திரன், திரைப்படங்களில் நடிக்கத்துவங்கினார்.
அட்லீ இயக்கிய தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்திலும் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் நடித்திருந்தார்.
முள்ளையே மலரவைத்த இந்த மகானின் உயிர் இன்று காலை உதிர்ந்தது. 79 வயதாகும் மகேந்திரன் சிறுநீரக கோளாறால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சொர்கத்தில் இறைவனை இயக்கச்சென்றிருக்கிறார் இயக்குனர் மகேந்திரன்.