கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். மேலும் இத்தேர்தலில் சென்னையின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக மற்றும் குறிப்பிடப்படும் நடிகராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக அரசியல் - நடிகர் & தயாரிப்பாளராக சினிமா என இரண்டிலும் மிக நேர்த்தியாக பணியாற்றி வந்தார். இருப்பினும் சமீபத்தில் விரைவில் சினிமாவில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகி அரசியலில் - மக்கள் பணியில் முழு கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்திருந்தார்.

கடைசியாக இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக திகழும் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் . மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் இன்று டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகியவற்றின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். 

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கமல்ஹாசன் அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

மாமன்னன் தான் எனது கடைசி திரைப்படம். - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.#GalattaNews 📢 @Udhaystalin @ikamalhaasan @RKFI @mari_selvaraj#Maamannan #UdhayanidhiStalin #KamalHassan #MinisterUdhayanidhiStalin #DMK #UdhayanidhiStalinவாழ்த்துகள் #NewHigh4TNSports pic.twitter.com/juIgyqgIhP

— Galatta Media (@galattadotcom) December 14, 2022