இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாக்ஷனின் க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியானது.நவரசத்தின் ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒன்பது எபிசோடுகள் அடங்கிய ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. 

நவரசாவில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியதர்ஷன், கார்த்திக் சுப்புராஜ்,கார்த்திக் நரேன்,ரதீந்திரன் R பிரசாத்,வசந்த் சாய்,அரவிந்த் சுவாமி,பிஜோய் நம்பியார்,சர்ஜூன் என ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் கிட்டார் கம்பி மேலே நின்று,சம்மர் ஆஃப் 92,பீஸ்,ப்ராஜட் அக்னி,இன்மை,பாயாசம்,ரௌத்திரம்,எதிரி,துணிந்தபின் என 9 எபிசோடுகள் வெளியானது.

நவரசாவின் ஒன்பது எபிசோடுகளில் ஒருசில எபிசோடுகள் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ப்ராஜட் அக்னி, கிட்டார் கம்பி மேலே நின்று, ரௌத்திரம், பீஸ் உள்ளிட்ட எபிசோடுகள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது நவரசா நெட்ப்ளிக்ஸின் டாப் 10 ல் இந்தியாவில் முதலிடத்தையும் உலக அளவில் 10 நாடுகளில் டாப் 10 மேலும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்,

எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஒன்று கூடி ஒரு ரூபாய்கூட ஊதியம் பெறாமல் தம் நேரத்தையும் உழைப்பையும் நல்கி நவரசாவை உருவாக்கிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி உங்களுடைய இந்த பேராதரவால் ஆறு மாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பதைத் தாண்டி நம் கலைக்குடும்பத்தினருக்கு நம் அன்பை அக்கறையை நன்றியை உணர்த்தமுடிந்தது. பெருமையில் நன்றியுணர்ச்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்கள். நீங்களும்தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சியில்லை. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்.
மணிரத்னம்
ஜெயேந்திரா பஞ்சாபகேசன்

என நவரசாவில் பணியாற்றிய நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிள்ளார்.