கோடை விடுமுறைறை குறி வைத்து பக்காவாக வெளிவந்த இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 10 நாட்களில் 300 கோடி ரூபாய் எனும் பெரும் வசூல் சாதனையை படைத்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் நாட்களிலும் இதையே வேகத்தில் வெற்றி நடை போடும் பட்சத்தில் 500 கோடி ரூபாய் இலக்கை மிக எளிதில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் கிட்டத்தட்ட 50 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஆயிரம் கோடி இன்னும் இமாலய இலக்கை எட்டுமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமரர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் நாவலை படித்த சில வாசகர்களுக்கு பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சில காட்சிகளில் உடன்பாடு இல்லை என்றாலும் தனது தேர்ந்த காட்சி அமைப்புகளால் அவை அனைத்தையும் தாண்டி படத்தை மணிரத்னம் ரசிக்க வைத்துள்ளார். மிகவும் சவாலான பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதையாக மாற்ற இயக்குனர் மணிரத்னத்திற்கு உறுதுணையாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் கை கொடுக்க தோட்டா தரணியின் பிரம்மாண்ட கலை இயக்கத்தில் ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில் படமாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் மிகச் சரியாக படத்தொகுப்பு செய்திருந்தார். குறிப்பாக பாடல்கள் பின்னணி இசை என அனைத்திலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மாயாஜாலம் காட்டினார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரசிகர்கள் மனதை வருடிய ஆழி மழை கண்ணா பாடலின் லிரிக் வீடியோவை பட குழுவினர் தற்போது சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளனர். சற்று முன்பு வெளியான ஆழி மழை கண்ணா பாடல் லிரிக் வீடியோ இதோ…