திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் மாவீரன். சிவகர்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவான மாவீரன் திரைபடத்திற்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை கொடுத்து மாவீரன் திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர். ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம் முதல் வாரத்தில் உலகளவில் ரூ 50 கோடிக்கு மேல் வசூல் செய்து தொடர்ந்து நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் மாவீரன் படத்தின் வெற்றி தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் மற்றும் இயக்குனர் மடோன் அஷ்வின் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஸ்வா அவர்கள் மாவீரன் படம் உருவான கதை மற்றும் அதன் பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வியடைந்த பிரின்ஸ் திரைப்படம் குறித்து அவர் பேசுகையில்,
"பிரின்ஸ் படத்திற்கு நான் இணை தயாரிப்பு செய்தேன். அந்த படம் திரையரங்குகளில் சரியா போகல.. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்த படம் அது.. இதை நான் இங்கு சொல்லனும்.. பிரின்ஸ் சரியா போகலனு தெரிஞ்சு அடுத்த நிமிஷம் அந்த நஷ்டத்தை ஈடு செய்தார் சிவகார்த்திகேயன். அதற்கு அவருக்கு நன்றி சொல்கிறேன்.. இதை நான் முன்னதாக பல மேடையில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்த வெற்றி மேடையில் சொல்கிறேன்.. இந்த வெற்றிக்கு முதல் காரணம் சிவகார்த்திகேயன் தான். வெறும் நடிகராக நான் சொல்லவில்லை. என் நண்பனா ஒரு சகோதரனா நான் அவருக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன். பிரின்ஸ் படம் சரியா போகல ன்றதால அவரிட்ட பேச தயங்கிட்டு இருந்தேன் எப்படி பேச போறோம் னு.. நான் பேசும்போது மாவீரன் எப்படி பண்ண போறோம் னு தான் கேட்டாரே தவிர பிரின்ஸ் படம் பத்தி அவர் என்கிட்ட பேசல.. மொத்த பழியையும் அவர் மேல ஏத்துக்குட்டு யாரையும் எதையும் அவர் சொல்ல விடல.. அவரோட நம்பிக்கை தான் இந்த வெற்றி.. இன்னிலருந்து இந்த படம் முதலீட்டை தாண்டிடுச்சு.. நாளையில இருந்து மாவீரன் படம் மேற்கொண்ட லாபத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது.” என்றார் தயாரிப்பாளர் அருண் விஸ்வா.